Skip to main content

சொத்துக்குவிப்பு புகார்: அதிமுக சேலம் இளங்கோவனின் வங்கி லாக்கர்களில் சிக்கியவைகள் என்ன?

 

 What are the contents of ADMK Salem Ilangovan's bank lockers?

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் போல் செயல்பட்டு வந்த இளங்கோவனுக்குச் சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான சொத்து ஆவணங்கள், நகைகள் சிக்கியுள்ளன.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். அதிமுகவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருந்து வரும் இவரை, கடந்த அதிமுக ஆட்சியின்போது கட்சியினர் நிழல் முதல்வர் என்றே சொல்லி வந்தனர். எடப்பாடி பழனிசாமி உடனான நெருக்கத்தால் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போதைய ஆளுந்தரப்புடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி,  எக்கச்சக்கமாகச் சொத்துகளைக் குவித்ததாக இளங்கோவன் மீது புகார்கள் கிளம்பின. 

 

இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து கடந்த அக். 22ம் தேதி புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள அவருடைய சொகுசு வீடு, முசிறியில் உள்ள அவருடைய மகன் நிர்வகித்து வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சேலம், சென்னை, கோவை, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள இளங்கோவனின் பினாமிகளுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 36 இடங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

 

இந்த சோதனையில் இளங்கோவனின் வீட்டில் இருந்து நேரடியாகப் பெரிய அளவில் சொத்துகள் கைப்பற்றப்படவில்லை. சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. அதேநேரம், அவருடைய பினாமிகளின் நகைக்கடைகள், வீடுகளில் இருந்து 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளி பொருள்கள், 34.28 லட்சம் ரூபாய் ரொக்கம், 70 கோடி ரூபாய்க்கான பங்குச்சந்தை முதலீட்டு ஆவணங்கள், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

சோதனையின்போது, இளங்கோவனின் வங்கி லாக்கர் சாவிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அந்த இரண்டு சாவிகளில் ஒன்று, இளங்கோவன் தலைவராக உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாக்கர் உடையது; மற்றொரு சாவி, அயோத்தியாப்பட்டணம் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கர் உடையது ஆகும். இந்நிலையில் அந்த இரண்டு வங்கி லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (நவ. 30) திறந்து ஆய்வு செய்தனர். இந்தியன் வங்கி லாக்கரில் எதுவும் சிக்கவில்லை. 

 

ஆனால், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆய்வு செய்தபோது அதிலிருந்து இளங்கோவனுக்குச் சொந்தமான சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த சொத்துகளின் விவரங்களை காவல்துறையினர் டைரியில் குறித்துக் கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அந்த ஆவணங்கள் அனைத்தும் லாக்கரிலேயே வைக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் இளங்கோவன் முன்னிலையில் நடந்தன. இதையடுத்து லாக்கர் சாவிகள் இரண்டும், ஊழல் ஒழிப்புப்பிரிவு நீதிமன்றத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 

 

இது குறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரிடம் கேட்டபோது, ''இளங்கோவன் முன்னிலையில் அவருக்குச் சொந்தமான இரண்டு வங்கிகளில் உள்ள லாக்கர்களும் திறந்து சோதனை நடத்தப்பட்டது. ஒரு லாக்கரில் இருந்து 30க்கும் மேற்பட்ட சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. அதிலிருந்த விவரங்களை கணக்கில் எடுத்திருக்கிறோம். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறிய சொத்து விவரங்களுடன் இப்போது கிடைத்த சொத்து விவரங்களுடன் சரிபார்க்கப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு கடன் சங்கம், அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு கடன் சங்கங்களின் லாக்கர்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி லாக்கரில் நடந்த சோதனையில், இளங்கோவனுக்குச் சொந்தமான நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த விவரங்களை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 

 

இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.