Advertisment

உழைப்புக்கு ஏது வயது... 87 வயதிலும் "விசில் தாத்தா"வின் மிதிவண்டி வியாபாரம்!  

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் 87 வயதான முதியவர் பாபு. இவரது பூர்வீகம் திருவண்ணாமலை. இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு பெண், மூன்று மகன்கள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் இவர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

Advertisment

பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்து வந்து நண்பர்கள் உதவியுடன் வளையாம்பட்டில் தங்கி டீ வியாபாரம் செய்ய துவங்கியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மிதிவண்டியில் பின்பக்கம் டீ கேன் கட்டிக்கொண்டு, முன்பக்கம் தின்பண்டபாக்கெட்களை வாங்கி கட்டிக்கொண்டு விற்பனை செய்ய புறப்பட்டு வருகிறார்.

தினமும் காலை 5.00 மணிக்கு எழும் இவர் இஞ்சி டீயை தயார் செய்து தனது மிதிவண்டியில் விற்பனைக்கு தேவையான பொருட்களை அடுக்கிக்கொண்டு மிதிவண்டியை 85 வயதிலும் வேகம் வேகமாக ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், பள்ளி கூடங்கள் மற்றும் பொது இடங்களில் விற்பனை செய்கிறார். மிதிவண்டியில் அமர்ந்து வியாபாரத்துக்கு புறப்பட்டதும் அவரின் கழுத்தில் தொங்கும் விசிலை வாயில் வைத்து துவங்குகிறார். விசிலின் சத்தம் மக்களின் கவனத்தை இவரின் பக்கம் திருப்புகிறது. வழக்கமான வாடிக்கையாளர்கள் இவரை நோக்கி வந்து இஞ்சி டீ குடிக்க துவங்குகின்றனர்.

இவர் சாலைகளில் மிதிவண்டியை வேகமாக ஓட்டிச்செல்வதை பார்க்கும் பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போகின்றனர். கழுத்தில் எப்போதும் விசிலை மாட்டிக்கொண்டிருக்கும் இவர் சாலையில் போகும் போது விசில் அடித்துக் கொண்டே போவதால் பள்ளி சிறுவர்கள் இவரை "விசில் தாத்தா" என அழைக்கின்றனர். இந்த பெயரையே வாணியம்பாடியில் இவரின் வாடிக்கையாளர்களும் சொல்லி அழைக்கின்றனர்.

87 வயதிலும் தசைகள் தளர்ந்தாலும், தன்னம்பிக்கை சற்றும் தளராமல், மன உறுதியோடு சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த 'இளைஞரின்' மன உறுதி, தன்னம்பிக்கைஅனைவராலும் பாராட்டப்படுகிறது. இது முடியாது என முடங்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் தருகிறார்.

humanist Old age home thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe