Skip to main content

புதுவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கடைகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?  -உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
What action has been taken against the illegal liquor shops in puducherry? -High Court Question!

 

ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 124 மதுபானக்கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, 4 வாரங்களுக்குள் அறிக்கையாக  தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் ஊரடங்கின்போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், 250 கடைகளின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

இந்நிலையில், நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுபானக் கடைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ள, புதுச்சேரி அரசின் இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில்,  அந்த மதுபானக் கடைகளின் விபரங்களை வெளியிட உத்தரவிடக்கோரி, பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது, ஊரடங்கில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடைகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், 124 மதுபானக் கடைகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் கடைகளின் விபரங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 124 மதுபானக் கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை,  4 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.