
சேலத்தில், குடிபோதையில் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்த மேற்கு வங்க மாநில வாலிபரை, கட்டடத் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அன்னதானப்பட்டி தட்சிணாமூர்த்தி கோயில் அருகே வசிப்பவர் சுந்தரம் (49). கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி மதி (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
சுந்தரம், பனமரத்துப்பட்டியில் கட்டட வேலைக்குச் சென்று வந்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரசன்குமார் மண்டல் (37) என்பவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து மது குடித்து வந்தனர். இந்நிலையில், ஆக.11ம் தேதி இரவு, அவர்கள் இருவரும் வழக்கம்போல் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது சுந்தரம், பிரசன்குமார் மண்டலை தன் வீட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இரவு, போதை தலைக்கேறிய நிலையில், பிரசன்குமார் மண்டல், சுந்தரத்தின் மனைவி மதியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த சுந்தரம், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து நண்பரை சரமாரியாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த பிரசன்குமார் மண்டல், நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுந்தரத்தின் மனைவியிடம் பிரசன்குமார் மண்டல் தவறாக நடக்க முயன்றதால்தான் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.