
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வெலிங்டன் ஏரி. இதன் முழு கொள் அளவு 29. இதில், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் 28 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. வெங்கனூர் ஓடை வழியாக ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், ஏரியின் முழு கொள்ளளவை எட்டிவிடும் நிலை உள்ளது.
ஏரி கரையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உபரி நீரை திறந்துவிட்டுள்ளனர். இந்த உபரி நீர் சிறுமுளை, பெருமுளை, நாவலூர், மேலூர், எறப்பாவூர் வழியாக சென்று மணிமுத்தாற்றில் கலக்கிறது.
உபரி நீர், திறக்கப்பட்டதால் அந்த நீர் செல்லும் ஓடை பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், சிறுவர்கள், இளைஞர்கள் உபரி நீர் செல்லும் ஓடை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு வெலிங்டன் ஏரி முழு கொள் அளவை நிரம்பி, உபரி நீர் திறந்துவிடுவது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.