Advertisment

“முதல்வரால் தங்கு தடையின்றி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” - அமைச்சர் ஐ. பெரியசாமி

publive-image

Advertisment

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் சிறுமலை பகுதியில் புறம்போக்கு நிலங்களைப்பொதுமக்களுக்கு வழங்கியது கலைஞர் ஆட்சி என்று திண்டுக்கல் மாநகராட்சி 33வது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நடைபெறுவது போல் கிராம சபைக் கூட்டங்களை மாநகர கிராம சபைக் கூட்டங்கள் மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்ரமணியன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதன்பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “திண்டுக்கல் மாநகராட்சியைப் பொறுத்தவரை குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக முதல்வர் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வைகை அணையில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வர திட்டம் அறிவித்து அதற்கான செயல்பாடுகள் விரைவில் நடைபெற உள்ளது.

Advertisment

2006-2011ல் நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணையிலிருந்து திண்டுக்கல்லுக்கும், வழியோர கிராமங்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அப்போது வைகையில் இருந்து குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு குழாய்கள் மற்றும் வாய்க்கால்கள் மூலம் மழைத் தண்ணீர் கொண்டுவர திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தத்திட்டம் நிறைவேற்றப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் மிக செழிப்பான மாவட்டமாக மாறும்.

இதுபோல மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் முறையாக வெளியேறுவதற்கும் மாசற்ற மாநகராட்சியாக திண்டுக்கல் மாநகராட்சியை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாசுகள் நிறைந்திருக்கிற புறநகர் பகுதியிலும் மாசுகள் அகற்றப்பட்டு தூய்மையான மாநகராட்சியாக மாற்றநடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் மீதம் உள்ள 26 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்.

தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட அரசுப்பணிகள் தற்போது தி.மு.க. ஆட்சியில் பாகுபாடின்றி அனைத்துத்துறையிலும் உள்ள காலியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்குத்தற்காலிக ஆசிரியர் பணி கொடுக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக்கப்பட்டது. இதன் மூலம் 4000 ஆசிரியர்கள் அரசுப்பணியில் அமர்ந்தனர். நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் மக்களுக்கு அதிக அளவில் நலத்திட்டங்களை நிறைவேற்றும் எண்ணம் இருப்பதால் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லாக் கடன் உதவி வழங்கப்பட்டது. தற்போது சுய உதவிக்குழு பெண்களுக்கும் கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக திண்டுக்கல் மாநகராட்சி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, திண்டுக்கல் தாசில்தார் சந்தன மேரி கீதா, மாநகர துணைச் செயலாளர் அழகர்சாமி, கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மேற்கு பகுதி செயலாளர்ஹக், மாநகரப் பொருளாளர் சரவணன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள், அதிகாரிகள்பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe