Skip to main content

“முதல்வரால் தங்கு தடையின்றி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

"Welfare programs are being implemented by the Chief Minister without hindrance.." - Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் சிறுமலை பகுதியில் புறம்போக்கு நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கியது கலைஞர் ஆட்சி என்று திண்டுக்கல் மாநகராட்சி 33வது வார்டில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

 

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நடைபெறுவது போல் கிராம சபைக் கூட்டங்களை மாநகர கிராம சபைக் கூட்டங்கள் மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் ஜான்  பீட்டர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்ரமணியன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 

 

அதன்பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “திண்டுக்கல் மாநகராட்சியைப் பொறுத்தவரை குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக முதல்வர் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வைகை அணையில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வர திட்டம் அறிவித்து அதற்கான செயல்பாடுகள் விரைவில் நடைபெற உள்ளது. 

 

2006-2011ல் நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணையிலிருந்து திண்டுக்கல்லுக்கும், வழியோர கிராமங்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அப்போது வைகையில் இருந்து குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு குழாய்கள் மற்றும் வாய்க்கால்கள் மூலம் மழைத் தண்ணீர் கொண்டுவர திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் மிக செழிப்பான மாவட்டமாக மாறும். 

 

இதுபோல மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் முறையாக வெளியேறுவதற்கும் மாசற்ற மாநகராட்சியாக திண்டுக்கல் மாநகராட்சியை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாசுகள் நிறைந்திருக்கிற புறநகர் பகுதியிலும் மாசுகள் அகற்றப்பட்டு தூய்மையான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் மீதம் உள்ள 26 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். 

 

தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட அரசுப் பணிகள் தற்போது தி.மு.க. ஆட்சியில் பாகுபாடின்றி அனைத்துத் துறையிலும் உள்ள காலியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த இளைஞர்களுக்குத் தற்காலிக ஆசிரியர் பணி கொடுக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக்கப்பட்டது. இதன் மூலம் 4000 ஆசிரியர்கள் அரசுப் பணியில் அமர்ந்தனர். நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் மக்களுக்கு அதிக அளவில் நலத்திட்டங்களை நிறைவேற்றும் எண்ணம் இருப்பதால் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லாக் கடன் உதவி வழங்கப்பட்டது. தற்போது சுய உதவிக்குழு பெண்களுக்கும் கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக திண்டுக்கல் மாநகராட்சி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.

 

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, திண்டுக்கல் தாசில்தார் சந்தன மேரி கீதா, மாநகர துணைச் செயலாளர் அழகர்சாமி, கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மேற்கு பகுதி செயலாளர் ஹக், மாநகரப் பொருளாளர் சரவணன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள், அதிகாரிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்