/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1391.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கடலூர் வந்தார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராசாக்குப்பம் மாருதி நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, 18 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆடூர் அகரம் பகுதியில் ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த காட்சி படங்களை பார்வையிட்டு, பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்வின் போது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)