
கர்நாடகாவில் கரோனா சிகிச்சையிலிருக்கும் சசிகலா வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறார் என்பது உறுதியானதும் அவரை வரவேற்க டி.டி.வி.யின் அ.ம.மு.க. அதிதீவிரத்திலிருக்கிறது.
சசி விடுதலை பற்றிய சர்ச்சைகள் கிளம்பிய நேரத்தில் தனி விமானத்தில் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்துவிட்டு வந்த டி.டி.வி. தினகரன், அதன் பின் சைலண்ட் ஆனவர், தற்போது வெளியேவரும் சசியை வரவேற்க தனது அமைப்பினரை ஸ்பீட் படுத்தியிருக்கிறார்.
தமிழகம் முழுக்கத் தனது அ.ம.மு.க. சார்பில் சுமார் ஒரு லட்சம் பேர்களைத் திரட்டிக் கொண்டு, கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி, மற்றும் வேலூர் பகுதிக்கு வரப் பணித்திருக்கிறார். கர்நாடக எல்லை தொடங்கி சென்னை வரை இடையில்லா தொடர் வாகனமிருக்க வேண்டும். அப்படி ஒரு மாஸ் காட்டினால் தான் சசிக்கான கிரேஸ் உயரும். கட்சி, அவரின் வசமிருக்கிறது என்கிற பிம்பம் உண்டாகும் என்பது திட்டமாம்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வ.தெ.மாவட்டச் செ.க்களான பரமசிவ ஐயப்பன், பொய்கை மாரியப்பன், மனோகரன் மற்றும் பிரைட்டர் ஆகியாரின் கூட்டத்தில் தொகுதிக்கு கணிசமான எண்ணிக்கையிலான வாகனத்தில் கட்சியினரைத் திரட்டிக் கொண்டு வேலூர் எல்லைக்கு வரவேண்டும் என்று அ.ம.மு.க தென்மண்டல அமைப்பாளரான மாணிக்கராஜா தெரிவித்திருக்கிறார். எங்களின் நிலவரப்படி லட்சம் பேர் திரளுவார்கள், அதில் அ.தி.மு.க.வினரும் வருகிறார்கள் என்கிறார் நெல்லை மாவட்ட அ.ம.மு.கவின் பொருளாளரான பால்கண்ணன்.
தென்மண்டலத்தின் ஒவ்வொரு சட்டமன்றத்திலிருந்தும். 30 வாகனங்களுக்கும் குறையாமல் வர வேண்டுமென்ற ஏற்பாடுகளுக்கு அ.ம.மு.க.வின் தலைமையிலிருந்து செலவு தொகைகள் தரப்பட்டு வரவேற்பு அணிவகுப்புக்குக் கொண்டு வரப்படும் வாகனங்களின் ரெஜிஸ்ட்ரேசன் நம்பர்கள் அ.ம.மு.க.வின் தலைமைக்குத் தரப்பட்டுள்ளதாம்.
அ.தி.மு.க.விலிருக்கும் சசிகலாவின் ஆதரவாளர்களும் அவரை வரவேற்க கர்நாடகா எல்லைக்குச் செல்லவிருப்பதான தகவல்கள் கூட உளவுப் பிரிவின் மூலம் மேலே போயிருக்கின்றனவாம். குறிப்பாக தூத்துக்குடியின் 60 வார்டு செ.க்களில் 27 வார்டு செ.க்கள் அ.ம.மு.க. வசம் சென்றுவிட்டதால் அவர்களின் வழியாகவும் சசி வரவேற்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஜன 27 அன்று சசிகலாவை வரவேற்க தொண்டர்களின் கூட்டம் கர்நாடகா எல்லை செல்வதையறிந்தே, அதற்கு கட்சியினர் சென்றுவிடாதவாறு அணை போடும் வகையில்தான் அ.தி.மு.க.வின் தலைமை, அன்றைய தினம் ஜெ வின் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சிக்கு கனத்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறதாம். அன்றைய தினம் தமிழகத்திலிருந்து சென்னைத் திடலுக்கு கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வின் கட்சித் தலைமையில் ஜன 21ம் தேதி நடந்த மா.செ.க்களின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு அதற்கான செலவு கரன்சிகளும் கைமாறப்பட்டுள்ளது என்கிற தகவல்களும் இலைத்தரப்பினரிடமிருந்து வருகின்றன.
ஜன 27ல் சென்னை கர்நாடக எல்லைகளின் மூச்சே திணறலாம்.