
கரோனா நோய் பரவலைக் கண்டு தற்போது மக்களிடையே பயம் குறைந்து வருகிறது. அதனால் உரிய வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு நடத்த வேண்டிய திருமணங்களை மற்றும் சுபகாரியங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சாலையில் உள்ள திருவந்திபுரம், தேவநாதசுவாமி கோவில் இங்கு சுபமுகூர்த்த நாட்களில் 100 முதல் 200 திருமணங்கள் வரை நடைபெறும். அப்படிப்பட்ட பிரசித்த பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் இதுவும் ஒன்று. இப்படி பிரசித்திபெற்ற கோவில் பூட்டப்பட்டு இருப்பதால் கோவிலின் வெளிப்புற சாலையில் நின்றபடி திருமணத்தை நடத்தி வருகிறார்கள். திருமண தம்பதிகளை வாழ்த்த வரும் உறவினர்கள் கூட்டம், வாகனங்களின் எண்ணிக்கை நிரம்பி வழிகின்றன. அரசின் உத்தரவை மீறி கோயிலின் முன்பு திருமணங்கள் நடைபெறுவது மக்களின் இறை பக்தியை காட்டுகிறது.
இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் திருவனந்தபுரம் தேவநாதசுவாமி கோவில் வாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண ஜோடிகளுக்குக் கோவிலின் வெளியே சாலையோரங்களில் நின்ற நிலையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இந்த திருமணங்களில் கலந்து கொள்ள ஏகப்பட்ட மக்கள் திரண்டு வந்திருந்தனர். இதனால் கோவில் வழியாகச் செல்லும் சாலையில் கூட்டம் அலை மோதியது. 'எல்லாம் இறைவன் செயல். கரோனா என்னும் கொடிய நோயைக் இறைவன் கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கை காரணமாக அவரது சன்னதியில் திருமணத்தை நடத்திவைக்கிறோம். அதற்காக வாழ்த்துவதற்கு வருகை தந்துள்ளோம்' என்கிறார்கள் திருமணம் நடத்தும் குடும்பத்தினரும், அவர்களை வாழ்த்த வந்த உறவினர்களும், நண்பர்களும்.