Skip to main content

பிரியாணி விருந்துடன் திருமண வரவேற்பு! மண்டபத்துக்கு சீல் வைத்த காவல்துறை..! 

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

Wedding reception with biryani dinner in cuddalore! Police seal the hall ..!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகரில் ஜெய் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று (01.06.2021) திருமண வரவேற்பு விழா நடந்தது. ஊரடங்கு என்பதால் திருமண மண்டபங்கள் இயங்கக் கூடாது என அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அனுமதியின்றி  ஊரடங்கை மீறி அந்தத் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் மணமகன் மற்றும் மணமகள் இருவரின் உறவினர்களும் திரளாக கலந்துகொண்டனர். 

 

நிகழ்ச்சியில் விருந்து உபசரிப்பாக பிரியாணி வழங்கப்பட்டது. திருமண மண்டபத்தின் முன்பகுதி பூட்டப்பட்டிருந்தது. ஆனால், திருமண மண்டபத்தின் பின் பகுதி வழியாக இரு வீட்டாரின் உறவினர்கள் அனைவரும் பிரியாணி உணவு அருந்திக்கொண்டிருந்தபோது ஊரடங்கை மீறி திருமண வரவேற்பு விழா நடைபெறுவதாக விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் சென்றது. உடனே விரைந்து சென்ற விருதாச்சலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபத்தின் பின்பக்கமாக சென்று ஊரடங்கு நேரத்தில் திருமண வரவேற்பு விழா நடத்துவது சட்டப்படி குற்றமாகும். அதனால் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப் போவதாகவும் அனைவரும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். 

 

அப்போது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மனிதாபிமான அடிப்படையில் எந்த நடவடிக்கையும் வேண்டாம் என கேட்டனர். அதற்கு நகராட்சி அதிகாரிகள் கரோனா மனிதாபிமானத்தைப் பார்த்து பரவுவது கிடையாது. ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கு உடனுக்குடன் பரவும் என எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வெளியேறினர். அதைத் தொடர்ந்து திருமண மண்டபத்தின் பின் பகுதியிலும், முன்பகுதியிலும் பூட்டுப் போட்டு பூட்டி சீல் வைத்தனர். 

 

இதேபோல், விருத்தாசலம காட்டுக்கூடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக தினசரி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டிருந்த நிலையில், சில கடை வியாபாரிகள் தினந்தோறும் திறந்து வியாபாரம் செய்துவந்தனர். இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கச் செல்கிறேன், இறைச்சி வாங்கச் செல்கிறேன் என போலீசாரிடம் கூறிவிட்டு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிச் சென்றனர். காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றியும், முகக்கவசம் இல்லாமலும் சுற்றித் திரிந்தனர். இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதையடுத்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சாம் கர்னல் தலைமையிலான அதிகாரிகள் திறந்திருந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், மார்க்கெட் இயங்காத வண்ணம் சீல் வைத்து இதனை மீறி காய்கறி கடைகளைத் திறந்துவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

 

இதேபோல் கடலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான அலுவலர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் தலைமையிலான போலீசார் கடலூர் வட்டாரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது தெரியவந்தது. அதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று நிதி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அந்த நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்