ADVERTISEMENT

வீரப்பன் பற்றிய இணையத்தொடர்; வெளியிடத் தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

09:20 AM Mar 15, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் வீரப்பன் குறித்து உருவாக்கிய "வீரப்பன் - கொலைக்கான பசி" என்ற வெப்சீரிஸ்ஸை வெளியிட பெங்களூரு 12வது முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீரப்பன் குறித்து "வீரப்பன் - கொலைக்கான பசி" என்ற வெப்சீரிஸ்ஸை பெங்களூருவைச் சேர்ந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.எம்.ஆர்.ரமேஷ் உருவாக்கி வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் “வீரப்பன் - கொலைக்கான பசி” என்ற வெப்சீரிஸ் வரும் ஜுலை மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நக்கீரன் இதழின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் சார்பில் பெங்களூருவில் உள்ள 12வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வெப்சீரிஸ்ஸை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நக்கீரன் ஆசிரியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடேசன், வீரப்பனை சந்தித்து போராடி ராஜ்குமாரை மீட்டவர் நக்கீரன் ஆசிரியர் என்று நீதிபதியிடம் வாதிட்டார். மேலும், வீரப்பனை பலமுறை சந்தித்து மீட்புப் பணியை நிறைவேற்றியது மட்டுமில்லாமல், வீரப்பன் குறித்து முழு தகவலையும் இந்த உலகுக்கு அளித்தவர் நக்கீரன் ஆசிரியர். “வீரப்பன் - கொலைக்கான பசி” என்ற இணையத் தொடரை உருவாக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷ் எனது கட்சிக்காரரைத் தொடர்பு கொண்டு இதுவரை வீரப்பன் குறித்து உண்மையான தகவல்களைப் பெறவில்லை. ஆகையால், ரமேஷ் உருவாக்கி வரும் வீரப்பன் குறித்த இணையத் தொடரில் எனது கட்சிக்காரர் குறித்து பல அவதூறு செய்திகள் இடம்பெற்றுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த இணையத் தொடரை முழுவதுமாக தனது கட்சிக்காரருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும். அதன் பிறகே தொடரை வெளியிட வேண்டும். அதுவரை இந்த தொடர் வெளியாக உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் நடேசன் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரான நக்கீரன் ஆசிரியரிடம் எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடரை முழுவதுமாக (அனைத்து மொழிகளிலும்) திரையிட்டுக் காட்டிய பிறகு வெளியிட வேண்டும் என்றும் அதுவரை இந்த தொடரை வெளியிட தற்காலிக தடை விதிப்பதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவித்து இருந்த நிலையில், நக்கீரன் ஆசிரியர் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT