/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1217.jpg)
சேலம்,மகுடஞ்சாவடி அருகேபோலி மருத்துவர் ஒருவர் போதை ஊசி செலுத்தியதால் தறித்தொழிலாளி உயிரிழந்தார். இதையடுத்து போலி மருத்துவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவருடைய மகன் மணிகண்டன் (30). விசைத்தறி தொழிலாளி. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, உள்ளூரில் ஒரு கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த சிவகுமார் (55) என்பவர் அவரை ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதனை செய்துவிட்டு, காய்ச்சல் இருப்பதாகக் கூறி ஊசி போட்டுள்ளார். தொடர்ந்து சில நாட்களுக்குத் தன்னிடம் வந்து ஊசி போட்டுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார்.
அதன்படி, தொடர்ந்து சிவகுமார் அவருக்கு ஊசி போட்டுள்ளார். இந்நிலையில், மணிகண்டனுக்கு திடீரென்று நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறுஉடல் உபாதைகள் ஏற்பட்டன. அவருடைய இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் திடீரென்று மரத்துப் போனதால், அவர் படுத்தப் படுக்கையாக ஆனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர், கடந்த 2ஆம் தேதியன்று மணிகண்டனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mani_10.jpg)
மேலும், அவருடைய தம்பி சீனிவாசன் மற்றும் உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், மணிகண்டனுக்கு போலி மருத்துவரான சிவகுமார் என்பவர் சிகிச்சை அளித்ததாகவும், அவருக்குத் தினமும் போதை ஊசி போடப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதற்கிடையே, ஜூலை 10ஆம் தேதி அதிகாலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலி மருத்துவர் சிவகுமாரை கண்டுபிடித்து கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, உறவினர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிவகுமார் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
புகாரில் சிக்கியுள்ள சிவகுமாரின் சொந்த ஊர், சேலம் ஆகும். அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால், இடங்கணசாலையைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு, அங்கேயே கிளினிக் திறந்து நடத்திவந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivakumar_16.jpg)
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கிளினிக் நடத்திவந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போதும் அவர் மீது புகார்கள் கிளம்பின,என்றாலும் புகார்களில் சிக்கும்போதெல்லாம் ஓரிரு மாதங்கள் தலைமறைவாக இருந்துவிட்டு, சகஜ நிலை திரும்பியவுடன் உள்ளூரில் வந்து சிகிச்சை அளிப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
மேலும், முதல் மனைவி மூலம் பிறந்த 16, 14 வயது மகன்களை வைத்தும் நோயாளிகளுக்கு ஊசி போட்டுவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரியவந்தன. இந்நிலையில், இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சிவகுமாரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோதுடிப்ளமோ படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. எனினும், உயிரிழந்த மணிகண்டனின் மரணத்துக்கு காரணம், சிவகுமார் அளித்த தவறான சிகிச்சைகள்தானா? அவர் போதை ஊசிதான் செலுத்தினாரா? என்பது உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
Follow Us