
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ''வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்க வைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு காரணம் திமுகதான். தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் பாஜக நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம்'' என்றார்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னையில் பாஜக போட்டியிட இருப்பதால் அந்த பகுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை நாங்களே முடிவு செய்வோம் என அதிமுக தரப்பினர் கூறி வரும் நிலையில், 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அமித்ஷா கூறியுள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 25 இடங்களை பாஜக கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us