We will vow to win all seven constituencies in Dindigul district i Periyasamy

Advertisment

திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான செயற்குழு கூட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள பிவிகே கிராண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட் டதிமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜா வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி பேசும் போது, “நம்மிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து தோழமை உணர்வுடன் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளை போல் ஒன்றிணைந்து 2026ல் நடைபெற உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டால் தான் மாபெரும் வெற்றி பெற முடியும்” என்று கூறினார்.

அதன் பின்னர் கூட்டத்தில் இறுதியாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிபேசும் போது, “கலைஞர் அரும்பாடுபட்டு வளர்த்த இயக்கம் தான் திமுக என்னும் மாபெரும் இயக்கம். ஒரு காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் மாற்றுக்கட்சியின் கோட்டையாக இருந்ததை முறியடித்து இன்று நாம் திமுகவின் கோட்டையாக மாற்றியுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் ஆட்சியில் இல்லாத போதும் திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தவர்கள் நீங்கள். காரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் கட்சி நிர்வாகிகளிடையே பிரச்சனை இல்லாத ஒரே மாவட்டமாக உள்ளது. அதற்கு காரணம் நமது ஒற்றுமை, கழகத்தின் மீதும் எங்களின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் பாசம் தான் உங்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் எப்படி சிறப்பாக செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஒரு சிலரிடம் உள்ள கருத்து வேறுபாடுகளில் தான் கடந்த தேர்தலில் நம்மால் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இம்முறை அது நடக்கக்கூடாது.

Advertisment

 i periyasamy

வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெற்று விட்டால் 2050 வரை திமுகவின் ஆட்சி தான் தமிழகத்தில் நடை பெறும். இதை நீங்கள் உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். ‘என்னை கிளை செயலாளர் மதிக்கவில்லை. நகர செயலாளர் மதிக்கவில்லை. ஒன்றிய செயலாளர் கண்டுகொள்ளவில்லை...’ என்பதை ஒருபுறம் நீங்கள் தள்ளி வைத்து விட்டு உதய சூரியன் சின்னம் வெற்றி பெற வேண்டும். தலைவர் மு.க.ஸ்டா லின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்று கங்கனம் கட்டி கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினருக்கும், மகளிர் அணியினருக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக வாக்கு சாவடியில் அவர்களுடைய பங்கு முக்கியத்துவமாக இருக்கும். தமிழகத்தில் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையில்லை. நமக்கு எதிராக எத்தனை அணி வந்தாலும் அவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் வண்ணம் நாம் வரும் தேர்தலில் பணியாற்றினால் 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறலாம். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்று வெற்றிக்கனியை தலைவர் கையில் வழங்க இன்றே அதற்கான பணியை தொடங்குவோம். சிறப்பாக தேர்தல் பணியாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய பதவி, கிடைப்பது உறுதி” என்று கூறினார்.

Advertisment

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் அணி பேரூர் மற்றும் உள்ளாட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்