/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ponmudi-oath-art.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-art-flag-ind_17.jpg)
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம்வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள்பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)