
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்திக்கையில், 10, 11, 12ஆம் தேதி என மூன்று நாட்களுக்கு எங்கள் வீட்டு வாசலிலேயே சிலை வைப்பது தனிமனித உரிமை. வழிபடுவதற்கு அரசு எந்த தடையும் செலுத்த முடியாது. ஒரு லட்சம் விநாயகரை வீட்டு வாசலில் வைத்து வழிபடுவோம். ஒரே ஒரு ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசு அதிகாரிகளும், நமது முதலமைச்சரும் வெளியே வராமல், நாங்கள் நேரடியாக எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது ஒரு ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. புதுச்சேரி, மகாராஷ்டிரா போலக் கட்டுப்பாடுகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழக அரசு மனதை மாற்றிக் கொள்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது'' எனக்கூறியிருந்தார்.
இன்று ‘பாஜக’ அண்ணாமலை இது தொடர்பாகக் கூறியுள்ளதாவது, ''அண்டை மாநிலங்கள் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்கும் பொழுது தமிழகத்தில் மறுப்பது ஏன்? கடவுள் சிலை செய்வது குற்றமா? தமிழர்கள் விருப்பமான கடவுளை வணங்க அனுமதி வேண்டுமா? ஒரு லட்சம் விநாயகரை வீட்டு வாசலில் வைத்து விநாயகர் அகவல் பாடி வழிபடுவோம். நம் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பிவைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.