Skip to main content

''எங்கள் வேட்பாளரை குதிரையில் ஏற்றி கோட்டைக்கு அனுப்புவோம்...'' -சி.பி.எம் வேட்பாளரை நெகிழ வைத்த கிராம மக்கள்!

 

cpm

 

தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தினம் தினம் ஏதாவது செய்து மக்களை கவர முயன்று வருகின்றனர். ஆனால் சில வேட்பாளர்கள் மட்டும் தான் மக்களால் தொடர்ந்து கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள். கௌரவிக்கப்படும் வேட்பாளர்கள் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சி.பி.எம் வேட்பாளர் சின்னத்துரையும் ஒருவராக உள்ளார்.

 

10 ம் வகுப்பு பள்ளிப் படிப்பை முடித்து குடும்ப வறுமையை போக்க தினக்கூலிக்கு ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் மாதம் 50 ரூபாய் சம்பளத்துக்கு போய் சேர்ந்த நிலையில், கூடுதலாக மாதம் ரூ.20 உயர்த்திக் கொடுக்க கேட்டதால் நிறுவனம் வேலையை விட்டு தூக்க நினைக்கும் போதுதான், நமக்கென்று ஒரு சங்கம் இருந்தால் தொழிலாளிகளின் உரிமையை கேட்கலாமே என்று சி.ஐ.டி.யு கிளையை உருவாக்கி சக தொழிலாளிகளுக்காக போராடி அந்த ரூ 20 சம்பளம் உயர்வை பெற்றுத் தந்தவர் சின்னத்துரை. அடுத்தடுத்து சாமானிய மக்களுக்காக தொடர்ந்து போராடி உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர். தான் குடியிருக்கும் தெரு மக்களுக்காக வீட்டுமனைப்பட்டா, சாலையையும் கூட பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றுக் கொடுத்து பலமுறை சிறைக்கும் போய் வந்துள்ளார்.

 

பாட்டாளிகளின் போராளியாக பார்க்கும்போது அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து இன்று சி.பி.எம் மாநிலக்குழுவில் இடம்பிடித்துள்ளார். இப்படி ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக உரிமைக்காக போராடிய சின்னத்துரை, ஒரு ஓட்டு வீடும், கட்டிய வேட்டி சட்டையும் தவிர ஒருகுழி விவசாய நிலம் கூட இல்லாதவர். இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்த சொத்து என் மக்கள் தான் என்று கண்கள் பணிக்க கூறுகிறார். இப்படி ஒரு வேட்பாளரைத் தான் திமுக கூட்டணியில் உள்ள சி.பி.எம் கட்சி தேர்வு செய்து கந்தர்வகோட்டை தொகுதிக்கு தேர்தல் களத்திற்கு போட்டிக்கு அனுப்பியுள்ளது. 

 

சின்னத்துரைதான் வேட்பாளர் என்றதும் திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளில் சீட்டுக் கேட்ட அத்தனை பொறுப்பாளர்களும் மனமுவர்ந்து ஏற்றுக் கொண்டதோடு கட்சி பாகுபாடின்றி முழுவீச்சில் பணிகளையும் செய்து வருகின்றனர். ஓட்டு வீட்டில் இருந்து கோட்டைக்கு அனுப்ப நாங்கள் வேட்பு மனு தாக்கலுக்கு பணம் தருகிறோம் என்று திருச்சி, புதுக்கோட்டை தொழிலாளர்கள், திமுக உள்ளிட்ட சக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். சி.பி.எம் கட்சியும் வேட்பு மனுவுக்கான பணத்தை கொண்டு வந்தது. இவர்களையெல்லாம் தாண்டி ஒரு மாற்றுத்திறனாளி 30 கிமீ பயணித்து வந்து, ''என்னிடம் வேட்பு மனுவுக்கான பணம் உள்ளது இதை கட்டுங்கள்'' என்று அன்பால் நெகிழச் செய்த போது.. காசு கொடுத்து உணவு கொடுத்து கூட்டத்தை கூட்டி வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில் தாங்களே திரண்டு வந்து ஆதரவு முழக்கமிட்டு வேட்புமனுவுக்கும் பணம் கொடுக்கும் இந்த மக்கள் தான் என் சொத்து என நெகிழ்ந்தார் சின்னத்துரை.

 

அதன்பிறகு நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் பைசா செலவு வைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் கூட்டணி தோழர்கள். விளம்பரம் செய்யும் கலைக்குழு, உணவு, வாகனம் என அனைத்தையும் தங்கள் சொந்த செலவிலேயே செய்து கொண்டு கலைப்பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல தான் ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டணி கட்சியினர் சொந்தக் காசில் டீ  குடித்துக் கொண்டு வீடுவீடாக வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து நெகிழும் சம்பவங்கள் கந்தர்வகோட்டை தொகுதியில் நிகழ்ந்து வரும் நிலையில், அடுத்து ஒரு பெரிய நெகிழ்ச்சியை ஒரு கிராம மக்கள் செய்திருக்கிறார்கள்.

 

கூட்டணி கட்சியினரோடு கிராமம் கிராமமாக வாக்கு சேகரிக்க சென்று வருகிறார் சின்னத்துரை. நேற்று கறம்பக்குடி ஒன்றியத்தில் திமுக மாசெ பெரியண்ணன் அரசு எம்எல்ஏ சுற்றுப்பயணத்தை தொடங்கி வைக்க பல கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தனர். மதியம் வாண்டான்விடுதி கிராமத்திற்கு சுற்றுப்பயணம் வந்தபோது கிராம எல்லையில் திரண்டிருந்த மக்கள் பட்டாசுகளை வெடித்து மேள தாளங்களுடன் காத்திருக்க வேட்பாளர் சின்னத்துரை வந்ததும் அவரை பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கச் சொன்னபோது இருந்தவர்களும் திகைத்து நிற்க.. மகிழ்ச்சியோடு கீழே இறங்கச் சொன்ன கிராம மக்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை குதிரையில் ஏற்றி "எங்கள் வேட்பாளரை குதிரையில் ஏற்றி கோட்டைக்கு அனுப்பப் போறோம்" என்று மகிழ்ச்சியாக கூறியதோடு, ஊருக்குள் குதிரையிலேயே அமர வைத்து அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான். வெற்றி பெற்றதும் இதே குதிரையில் ஏற்றி தான் கோட்டைக்கு அனுப்புவோம் என்றனர். இதைக் கேட்டு இத்தனை அன்பு வத்திருக்கும் மக்களுக்காக ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் உழைப்பேன் என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சின்னத்துரை. 

 

தொடர்ந்து, இத்தனை வயதுக்கு இதுவரை பீச்சில் நிறுத்தப்பட்டுள்ள குதிரையில் மட்டுமல்ல திருவிழாவில் ராட்டிணத்தில் உள்ள பொய்க்குதிரைகளில் கூட ஏறியதில்லை. ஆனால் வாண்டான்விடுதி கிராம மக்கள் என்னை உயர்ரக வெள்ளைக் குதிரையில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எப்படி இவர்களுக்கு நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை என்றார்.

 

அப்போது அங்கிருந்த மூதாட்டிகள்.. நம்ம ராஜராஜசோழன் இப்படித்தான் குதிரையில ஏறி நம்ம கந்தர்வகோட்டை வழியா புதுக்கோட்டை போவாராம். அது போல நீயும் கோட்டைக்கு குதிரையில போகனும்ய்யா.. போவாய்ய்யா என்று சொல்ல வேட்பாளர் மட்டுமின்றி கூட வந்தவர்களும் நெகிழ்ந்து போனார்கள். 

 

மக்கள் கௌரவித்து கொண்டாடும் ஒரு சில வேட்பாளர்களில் கந்தர்வகோட்டை சி.பி.எம் வேட்பாளர் சின்னத்துரையும் ஒருவர்.