இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, ஃபார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தகுதி சுற்றுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வந்தனர். சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நேற்று நிறைவடைந்துள்ளது.
இந்த பந்தயத்தில், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அகமதாபாத் அணியைச் சேர்ந்த திவி நந்தன் மற்றும் மூன்றாவது இடத்தை பெங்களூர் அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் ஆகியோர் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இந்நிலையில் கார் பந்தயம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை உயர்த்துவோம்' என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர், 'சென்னையில் ஃபார்முலா கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தற்கு வாழ்த்துகள். விளையாட்டு துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக நாம் உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.