ADVERTISEMENT

'கோயம்பேட்டில் இருந்துதான் இயக்குவோம்' - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்

05:31 PM Jan 24, 2024 | kalaimohan

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று (24/01/2024) இரவு முதல் சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், 'சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை ஆம்னி பேருந்துகள் கொண்டு வரவேண்டும். ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவு செயலிகள் தக்க மாற்றங்களை செய்துவிட வேண்டும். இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க வேண்டும். இ.சி.ஆர் சாலை மார்க்கத்தை தவிர்த்து மற்ற வழிகளில் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட வேண்டும். உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய தகவலை வழங்காமல் தேவையின்றி பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தினால் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், ''இரண்டு நாட்களில் உடனே மாற்ற வேண்டும் என்பது பாசிபிலிட்டி இல்லாத விஷயம். தைப்பூசம், குடியரசு தின என தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்கு மட்டும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இரண்டு நாளில் உடனே மாற்றுங்கள் என சொல்கிறார்கள். மாற்றுவதற்கான வாய்ப்புகள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட சாதாரண நாட்களில் 700 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1,250 பேருந்துகளும், விழா காலங்களில் 1600 பேருந்துகளையும் இயக்கி வருகிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிற்க கிட்டத்தட்ட 144 பார்க்கிங் தான் இருக்கிறது என்கிறார்கள். ஆயிரம் பேருந்துகளை எப்படி 144 பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிற்கவைக்க முடியும். இதைத்தான் கேட்கிறோம். கோயம்பேட்டை காலி பண்ணுங்க காலி பண்ணுங்க என்று சொல்கிறீர்கள். நாங்கள் அங்கு பேருந்துகளை எங்கே நிறுத்துவோம். எந்த சிஎம்டிஏ அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை. யாரும் எங்களிடம் என்ன வசதி இருக்கிறது என சொல்லவில்லை. ஊடகங்களில் மட்டும் தான் செய்தி வருகிறது. காலி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு கூட சர்குலராக வரவில்லை. நான்கு நாட்களில் காலி செய்யப்பட வேண்டிய விஷயமா இது. அரசு ஏன் இரண்டு நாட்களாக தீவிர நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். அதனால் பயணிகள் நலன் கருதி உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை நடத்தி பயணிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT