Skip to main content

'கோயம்பேட்டில் இருந்துதான் இயக்குவோம்' - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
'We will operate from Coimbate'-Omni Bus Owners plan

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

vck ad

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று (24/01/2024) இரவு முதல் சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், 'சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை ஆம்னி பேருந்துகள் கொண்டு வரவேண்டும். ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவு செயலிகள் தக்க மாற்றங்களை செய்துவிட வேண்டும். இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க வேண்டும். இ.சி.ஆர் சாலை மார்க்கத்தை தவிர்த்து மற்ற வழிகளில் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட வேண்டும். உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய தகவலை வழங்காமல் தேவையின்றி பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தினால் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், ''இரண்டு நாட்களில் உடனே மாற்ற வேண்டும் என்பது பாசிபிலிட்டி இல்லாத விஷயம். தைப்பூசம், குடியரசு தின என தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்கு மட்டும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இரண்டு நாளில் உடனே மாற்றுங்கள் என சொல்கிறார்கள். மாற்றுவதற்கான வாய்ப்புகள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட சாதாரண நாட்களில் 700 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1,250 பேருந்துகளும், விழா காலங்களில் 1600 பேருந்துகளையும் இயக்கி வருகிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிற்க கிட்டத்தட்ட 144 பார்க்கிங் தான் இருக்கிறது என்கிறார்கள். ஆயிரம் பேருந்துகளை எப்படி 144 பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிற்கவைக்க முடியும். இதைத்தான் கேட்கிறோம். கோயம்பேட்டை காலி பண்ணுங்க காலி பண்ணுங்க என்று சொல்கிறீர்கள். நாங்கள் அங்கு பேருந்துகளை எங்கே நிறுத்துவோம். எந்த சிஎம்டிஏ அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை. யாரும் எங்களிடம் என்ன வசதி இருக்கிறது என  சொல்லவில்லை. ஊடகங்களில் மட்டும் தான் செய்தி வருகிறது. காலி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு கூட சர்குலராக வரவில்லை. நான்கு நாட்களில் காலி செய்யப்பட வேண்டிய விஷயமா இது. அரசு ஏன் இரண்டு நாட்களாக தீவிர நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். அதனால் பயணிகள் நலன் கருதி உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை நடத்தி பயணிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்-ஓட்டுநரால் தப்பிய பயணிகள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Omni bus catches fire - passengers luckily escape

சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு  சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை  ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஓட்டுநர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்திகேயன், பஸ்சை உடனடியாக சாலையோரமாக நிறுத்தியதோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். 

ஓட்டுநரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்ததோடு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே மது விற்கத் திட்டமா? - ராமதாஸ் கண்டனம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Condemnation of Ramadoss for Planning to sell liquor online

ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்  பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை  சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால்தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.

மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது - புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான் மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே  மதுவை நேரடியாக  கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

போதை குறைந்த  மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில்  வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும்  மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி  அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை  ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.  மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.