highcourt chennai

தமிழக கிராம கோயில்களின் சீரமைப்புப் பணிகளுக்காக, பெரிய கோயில்களின் உபரி நிதி ரூ.10 கோடியைத் தற்போது பயன்படுத்தமாட்டோம் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

Advertisment

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் உள்ள 47 பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு ஒதுக்கி, கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஆயிரம் கிராம கோயில்களின் சீரமைப்புப் பணிகளுக்காக 20 பெரிய கோயில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்க, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் கிராம கோயில்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தமிழக சட்டப் பேரவையில் முதல்வர், கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.

highcourt chennai

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உள்பட, 20 பெரிய கோயில்களில் இருந்து 25 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பயன்படுத்த அனுமதியளித்து, அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோல, கோயில் நிதி வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுசம்பந்தமாக, முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், நிதியைப் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைக்கு இந்த நிதியைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.