'We will not do anything without consent' - Union Minister assured Thiruma

நேற்று (09.12.2024) நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதாவது, “இவ்விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்.பி.க்கள் எதிர்த்திருக்கலாம். பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், “நீங்கள் முதலமைச்சராக இருந்த போது எத்தனை கடிதங்களை அப்படி வெளியிட்டீர்கள்? எனப் பதிலளித்தார்.

அதே சமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, திமுக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. திமுக ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தைத் தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன். ஒருவேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்மைச்சராக இருக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார். அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

'We will not do anything without consent' - Union Minister assured Thiruma

Advertisment

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் தொடர்பாக மத்திய சுங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக்கோரி அவரிடம் வலியுறுத்தியதாகவும், அப்பொழுது 'தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எதுவும் செய்யாது' என அமைச்சர் உறுதி அளித்திருப்பதாகவும் 'தமிழகமக்களோடு இருப்போம் கவலை வேண்டாம்' என அமைச்சர் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.