'We will not allow Seeman to enter any place without providing proof'- TPDK Ramakrishnan interview

நேற்று கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சீமான் சொல்வது போல அந்த கொச்சை செய்தி பெரியாரால் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி அபாண்டமான பொய்யை சீமான் பரப்பி வருகிறார். இப்படி ஏற்கனவே 1973 ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகை தவறான செய்தி பரப்பியது. என்னவென்று சொன்னால் பெரியார் அடுத்தவர் மனைவியை பெண்டாள சொல்கிறார் என்ற செய்தியை வெளியிட்டது.

Advertisment

எங்களுடைய மூத்த வழக்கறிஞர் துரைசாமி உடனடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் பத்திரிகையின் ஆசிரியர் சோ செய்தி போட்டதற்கு மன்னிப்பு கேட்டார். இதுபோன்ற நிலைமை இப்பொழுது சீமான் ஏற்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்பி வரும் சீமான் இப்பொழுது பாண்டிச்சேரியில் இருப்பதாக அறிகிறோம். பாண்டிச்சேரியிலும் எங்களுடைய கட்சியினர் அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று கேட்க இருக்கிறார்கள். எங்கு போனாலும் சீமானை ஆதாரம் தராமல் எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்'' என்றார்.