Skip to main content

'இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்'-வழக்கறிஞர் வில்சன் பேட்டி 

Published on 21/05/2025 | Edited on 21/05/2025
'We will move the Supreme Court against the interim injunction' - Lawyer Wilson Interview

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட பத்து மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் மீண்டும் சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் முறை அனுப்பியும் அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.

இந்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் 142 சட்ட விதியை பயன்படுத்தி நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததோடு, மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த  வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் சட்டப்பிரிவுகள் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே இதனை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் இருந்தால் அந்த அதிகாரம் சட்டமன்றத்திற்கா அல்லது அமைச்சரவைக்கா அல்லது மாநில அரசினுடைய தலைவராக இருக்ககூடிய ஆளுநருக்கா என எந்தவொரு தெளிவும் இல்லை' என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகங்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கை அவசரகதியில் விசாரிப்பதற்கு எந்த ஒரு அவசியமும் இல்லை. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதம் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. பாஜக மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாஜலபதி உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே இந்த  வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கில் எந்தவித இடைக்கால உத்தரவும் விதிக்கக் கூடாது' என  வாதிடப்பட்டது.

இருந்த போதும் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க கூடிய அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்ட பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.

'We will move the Supreme Court against the interim injunction' - Lawyer Wilson Interview


இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் அளித்த பேட்டியில் "துணைவேந்தர் நியமனம் தொடர்பான அரசின் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும். மனுதாரரான பாஜக நிர்வாகி, எந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் வழங்காத நிலையில், எதன் அடிப்படையில் நாங்கள் வாதிட முடியும்? நீதிபதிகள் என்ன சொன்னார்கள் என்பதைக் கூட கேட்க முடியாத படி மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது" என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்