ADVERTISEMENT

''அடுத்த வருஷம் இதே மதுரையில் இதே ஜல்லிக்கட்டில் சந்திப்போம்''-அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு!   

05:32 PM Jan 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

காலை 7 மணியிலிருந்து விறுவிறுப்பாக தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் ஏழு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 624 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திவந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் தொடக்கம் முதலாக 19 காளைகளை அடக்கிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஏழு சுற்றுகள் முடிவில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். 19 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாவது இடமும், 11 காளைகளை அடக்கிய பரத் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டது போட்டியாளர்கள் இடையே மனநிறைவை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்து விடுவதும், மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதும் ஒரு அழகு என்றால், உள்ளூர் வர்ணனையாளர்கள் காளைகளை அவிழ்த்து விடுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவது தனி அழகு.

போட்டியின் இறுதியில் கடைசி காளையை அவிழ்ந்துவிட்டபொழுது ''ஜல்லிக்கட்டு இத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்... அருமையான ஜல்லிக்கட்டு... அருமையான ஊர்... அருமையான மக்கள்... அடேங்கப்பா அழகுடா... அப்படியே புதுக்கோட்டை பக்கம் போய் விட்டு, அடுத்த வருஷம் இதே மதுரையில் இதே ஜல்லிக்கட்டில் சந்திப்போம்'' என வர்ணனையாளர் பேசியது உற்சாக நிறைவை தந்தது.

இப்போட்டிக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 1,300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க 50 பேர் கொண்ட மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசும், சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பில் இருசக்கர வாகனம் பரிசாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT