
அடுத்தடுத்து வரும் காலங்களில் சென்னையில் நீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், தலைநகரான சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த போது பல்வேறு இடங்களில் நீர்த்தேங்கும் சூழல் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். அதிமுக ஆட்சியில் வடிகால் வசதிகள் செய்யப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என திமுக தரப்பிலும், தற்போதுள்ள திமுக அரசு நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அதிமுக தரப்பில் மாறிமாறி குற்றச்சாட்டுகள் வைத்துக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''அடுத்தடுத்து வருகின்ற மழைக் காலங்களில் நிச்சயமாகப் பாலங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு ஒரு வரைவு திட்டத்தை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்து பணிகளை மேற்கொள்ளும். சென்னையில் பெய்த மழை பல இடங்களை நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அனைத்தையும் பதிவு செய்து இருக்கிறோம். வருங்காலங்களில் ஒட்டுமொத்தமாகச் சென்னையில் இருக்கின்ற அனைத்து குறைகளையும் களைய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நிதிச் சுமை ஒருபுறமிருந்தாலும் மாநகர் என்பது தலை தமிழகத்தின் தலைநகர் என்பதால் இதனைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கு நிதியைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய அறிவுத்திறனால் சென்னையை நிச்சயம் ஒளிரச் செய்வார் முதல்வர்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)