Advertisment

'தேர்தலுக்கு பிறகுதான் தெரியும்'-விசிக எம்பி ரவிக்குமார் பேட்டி

 'We will know only after the election' - Interview with VKC MP Ravikumar

'நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுவது ஒரு வியப்பல்ல. அந்தக் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பதை தேர்தல் முடிந்த பிறகுதான் பார்க்க வேண்டும்' என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டம் வருகிற 6 ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மேடை அமைத்தல், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் இன்று சிதம்பரம் வந்தார். அவருடன் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கூறியதாவது, ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் வருகிற 6 ஆம் தேதி சிதம்பரத்தில் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவை கொண்டாட இருக்கிறோம். அதற்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இன்று பார்வையிட்டோம். இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எண்ணுகிறோம். அதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெற்றி விழா என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி, அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவது தமிழ்நாட்டில் 75 ஆண்டு கால தேர்தல் அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு நிலை. இதற்கு காரணமான திருமாவளவனை பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்த இருக்கிறோம். இதிலே கூட்டணி கட்சி தலைவர்கள் கே.எஸ். அழகிரி, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் ஒரு வியப்புக்கு உரியது அல்ல. அந்தக் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரிய வரும். அந்தவிதத்திலே அது வாக்குகளாக மாறக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். அவரால் பெரிய அளவிலே ஒரு தாக்கத்தை தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்த முடியாது என்று கருகிறோம். ஏனென்றால் தமிழ்நாடு அரசியல் என்பது கொள்கை சார்ந்த அரசியலாக இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுடைய கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அவருடைய கொள்கை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இல்லை. எனவே தேர்தலில் பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும்.

அவருக்கு கூட்டம் கூடுகிறதா இல்லையா என்பதை பார்த்து நாங்கள் முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்துதான் நாங்கள் முடிவு எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் திருமாவளவன், நாங்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்பதை தெளிவாக அறிவித்து விட்டார். அதற்கு காரணம் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டை சனாதன சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்த விதத்திலே இந்த 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை சொல்லி இருக்கிறது. ஆனால் அது எப்போது தொடங்கப்படும். எப்போது முடிவடையும். என்று எதுவும் சொல்லப்படவில்லை. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பே எடுக்கவில்லை. இதையடுத்து 2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோது 2031இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அதன்படி மகளிர் இட ஒதுக்கீடு கொடுப்போம் என்றுதான் கூறியிருக்கிறார்கள். மகளிர் இட ஒதுக்கீடு 2035 வாக்கில்தான் அமலாகும். அவர்கள் சொல்படி 2031 ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள். அப்படியானால் அப்போது ஒன்றிய அரசில் யார் பொறுப்பில் இருப்பார்கள் என்பது தெரியாது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா என்பது சந்தேகம். ஏனென்றால் இப்போதே அவர்கள் ஒரு மைனாரிட்டி அரசாங்கத்தைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2029 லேயே அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இந்த அறிவிப்பு பீகார் தேர்தலை மனதில் வைத்து வெளியான அறிவிப்புதான். கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி எந்த அளவிற்கு பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்த்தோம். அதற்கு காரணம் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துதான் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள். பாஜகவோடு சேர்ந்ததால்தான் வாக்கு வங்கி குறைந்தது என்று அதிமுகவினர் கூறினார்கள். அதன்படி பார்த்தால் தற்போதும் வாக்கு வங்கி குறையத்தான் செய்யும். அவர்கள் தற்போது ஒரு பொருந்தா கூட்டணியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை திசை திருப்ப அவர்கள் எதையாவது சொல்கிறார்கள்'' எனக் கூறினார்.

முன்னதாக மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு கீழே இறங்கும் போது கீழே இறங்கும் படியை சரியாக கட்டாததால் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு, எம்பி ரவிக்குமார் மற்றும் கட்சியினர் கீழே சரிந்தனர். அருகே இருந்த கட்சியினர் அவர்களை பத்திரமாக பிடித்து மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

tamizhaga vetri kazhagam tvk vijay ravikumar vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe