ADVERTISEMENT

“எங்களால் முடியும் அளவிற்கு மக்களுக்கு உதவி செய்வோம்” - லயோலா கல்லூரி  முதல்வர்.

12:32 PM May 18, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து முக்கிய நகரங்களிலும் முழு ஊரடங்கானது அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பாதிக்கப்படுபவர்கள், இறப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலத்தரப்பட்ட மக்களும் வேலைக்குச் செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அந்த வகையில், பசியால் மக்கள் வாடிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு பலரும் தினமும் சாலையோரவாசிகளுக்கு உணவு அளித்துவருகின்றனர். மேலும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவை தங்களிடம் இருப்பவற்றை மக்களுக்கும் அரசிடம் பகிர்ந்தும் உதவி செய்து வருகின்றனர். அதேபோல் சென்னை லயோலா கல்லூரியானது முதல் அலையினை தொடர்ந்து தற்போதும் உதவி செய்துவருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கல்லூரியின் முதல்வர் பேசியதாவது, “கரோனா நோய் தடுப்பு என்பது இந்தச் சூழலில் மிக மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் இதில் அதிகமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றன. அதில் எங்களது லயோலா கல்லூரியானது முதல் தொற்றின் சமயத்திலும், இரண்டாம் தொற்று சமயத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமாக ஈடுபட்டு உதவிகள் செய்துவருகிறது. இந்த இரண்டாம் அலை பரவலின்போது லயோலா கல்லூரியானது மூன்று வகையான காரியங்களை முன்னெடுத்துள்ளது. ஒன்று அரசோடும், மாநகராட்சியுடனும் இணைந்து (டெலி காலிங் கவுன்சில்) முகாம்கள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறை வழங்கிவருகிறோம்.

அனைத்து மக்களுக்கும் ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த அரிய முயற்சியில் லயோலா கல்லூரி சமூகத்துறை மாணவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக நேற்று (17.05.2021) சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் கரோனா தடுப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ மருத்துவர் எழிலன் இந்த திட்டத்தை முன்னெடுத்து ஆரம்பித்திருக்கிறார். மூன்றாவதாக எங்களது நிறுவனத்தின் பேராசிரியர் லூயிஸ் கூறியது போல, ‘ஒன்றுபடுவோம் வென்றிடுவோம்’ என்ற கொள்கையுடன் மக்களிடம் கரோனா கிட்டைக் கொடுத்துவிடுவதால், மக்கள் அவர்கள் வாழும் இடத்தில் கரோனா பரவலைத் தடுத்து பாதுகாப்போடு இருப்பார்கள் என்ற நோக்கத்தோடு இந்த முயற்சியை செய்துள்ளோம்.

ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த திட்டத்திற்காக முன்வந்துள்ளனர். நேற்று அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். இன்று அவர்கள் கையில் கரோனா கிட்டைக் கொடுத்திருக்கிறோம். அதேபோல் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை செய்துவருகிறோம். மேலும் இந்த உதவிகளை அவர்கள் வழியாக 43 பகுதிகளுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்துகொண்டே இருப்போம். எந்த அளவுக்கு மக்களோடு இணைந்து எங்களால் பணிபுரிய முடியுமோ அந்த அளவுக்கு லயோலா கல்லூரியானது உடன் இருந்து தேவையான உதவியை செய்யும் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT