Advertisment

'நாளை முழுமையான விடை கிடைக்கும்'-துரை வைகோ பேட்டி

mdmk

மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் துரை வைகோ, தான் வகித்து வரும் மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து துரை வைகோ எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன்.

Advertisment

சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். என் தந்தை தலைவர் வைகோவுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன்.

இயக்கத் தந்தையை நேசிப்பதை போல என்னையும் கழகத் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை. எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்திருந்தார்.

durai vaiko

கோப்புப்படம்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, ''என்னால் கட்சியில் பிரச்சனை வேண்டாம் என நினைக்கிறேன். கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். அதிக ஜனநாயகம் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின் பேரிலேயே நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். என்னைப் பொறுத்தவரை முதன்மைச் செயலாளராக முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது, செய்யும் பொழுது பல பிரச்சனைகள் இருக்கிறது.இந்த இயக்கத்தை பொறுத்தவரை இந்த ஏழு வருடத்தில் நான் வருவதற்கு முன் எப்படி இருந்தது என்பது எல்லா இயக்கத் தோழர்களுக்கும் தெரியும். எவ்வளவு பேர் உழைத்தும் இந்த கப்பல் கரை சேருமா என்ற கேள்வி எழும் பொழுது, இதுபோன்ற சிலநபர்கள் கட்சியை சிதைக்கும் வேலைகளை செய்வதற்கு மத்தியில் கட்சியின்அடுத்தகட்ட பயணம் என்பது கஷ்டமாக இருக்கிறது. அதுவும் முதன்மைச் செயலாளராக எல்லாப் பழியையும் நான் சுமக்க வேண்டியது இருக்கும். பொறுமையாக இருங்கள்மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின் முழுமையான விடை கிடைக்கும்'' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்த பிரச்சினை தொடர்பாக சுமூகமான முறையில் தீர்வை எட்ட முயற்சி எடுக்கப்படும். கட்சியில் பல விஷயம் உள்ளது. நாளைக்கு நடக்கும் நிர்வாகக் குழுவில் பேசலாம்'' என தெரிவித்துள்ளார்.

politics vaiko mdmk durai vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe