'We want electricity we want'- people protested with torches

Advertisment

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் வெள்ளநீர் வடியாததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மின்சார சேவை இல்லாததால் அவதியுற்ற மக்கள் சாலையை மறித்து தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராதாகிருஷ்ணன் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை காரணம் காட்டி தங்கள் பகுதிக்கு தற்போது வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், மூன்று நாட்களாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்ததுடன், 'வேண்டும் வேண்டும் மின்சாரம் வேண்டும்' என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.