நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகச் சம்பவ இடத்திற்குச் சென்ற நீதிபதியை அங்கிருந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அஜித்குமார் வழக்கு சம்பந்தமாக நீதிபதி வெங்கட பிரசாத், அஜித்குமாரை தனியறையில் வைத்துக் காவல் விசாரணை நடத்திய மடப்புரம் கோவில் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் உதவியாளர் அலுவலகத்தின் பின் பகுதியில் நீதிபதி கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது கோவிலுக்கு வெளியே கடை வைத்து நடத்தி வரும் அப்பகுதி பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நீதிபதியிடம் நடந்த விஷயத்தைக் கூற வேண்டும் என முற்றுகையிட்டனர். அப்போது நீதிபதி அவர்களிடம், “அனைவருக்கும் சமன் அனுப்பப்படும். அப்போது விசாரணையில் நேரடியாக வந்து உங்களுடைய சாட்சியங்களைச் சொல்லலாம்” எனக் கூறிவிட்டுச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பேசுகையில், “போலீசார் அஜித்தை பைக்கில் பின்னாடி உட்கார வைத்து கூட்டிட்டு போனார்கள். அதற்கு பின்னால் கோயில் அலுவலர்கள் போனார்கள். அவர்கள் யார் என்பதை நான் பார்க்கவில்லை. இங்குள்ள கேமராவை பாருங்கள். அஜீத்தை கூட்டிட்டு வந்தது உள்ள என்ன நடந்துச்சு எல்லாமே தெரிஞ்சிரும். அப்போது அதனை இங்கு இருந்த நாங்கள் எல்லாருமே பார்த்தோம்.
கூட்டிட்டு போகும்போது நான் மட்டுமின்றி கடைக்காரர்கள் எல்லாருமே பார்த்தோம். சனிக்கிழமை சாயங்காலம் 4 மணிக்கு டெம்போ வண்டி வருது. அப்போது அஜித்தை நடந்து தான் கூட்டிட்டு போனார்கள். நடக்க வச்சதான் கைய புடிச்சுதான் கூட்டிட்டு போனாங்க. ஆஜித்தும் தாங்கி தாங்கி தான் போனேன். திரும்பி அஜித் வருகையில் ஆட்டோல அஞ்சு பேரு தூக்கிட்டு வந்துதான் போட்டாங்க. அஜித் நடந்து வரவில்லை. உள்ள இருந்து தூக்கிட்டு வந்தார்கள். 4 மணிக்கு வண்டி வந்து நின்றது. 6 மணி, 6.30 மணி இருக்கும் உள்ள இருந்து வண்டிக்குக் கொண்டு வரும் போது.
அப்போது அந்த சவுண்ட நாங்கள் கேட்டுக்கிட்டு தான் கடைக்காரர்கள் இருந்தோம். போலீசார் எல்லோரும் வந்தார்கள். அச்சமயத்தில் போலீசார் எல்லாத்தையும் வெளியில் தள்ளினார். அப்போது, “ஐயோ அம்மா ஐயோ ஐயோ ஐயோ ஐயோ” என்று அஜித் கதறினார். அந்த தடி அடி சவுண்டு டமா டம்ம டமர்ன்னு மாத்தி மாத்தி கேட்கதான் செய்தது. அங்கு வந்தவர்களை ஃபுல்லா வெளியில் போங்க நீங்க வெளியில் போங்கள் என்று சொல்லிக் கேட்ட அடைத்து விட்டார்கள். இதை எல்லாம் நாங்கள் நேரடியா பார்த்தோம்” எனத் தெரிவித்தனர்.