Advertisment

பாரதிராஜா, கவுதமன் மீது போடப்பட்டுள்ள கொடிய பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் - கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்

b g

இயக்குநர் கௌதமன் மீதும், இயக்குநர் பாரதிராஜா மீதும் போடப்பட்டுள்ள கொடிய பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்த அவரது அறிக்கை: ’’துடிப்புமிக்க தமிழர் உரிமைப் போராளி இயக்குநர் வ. கௌதமன், கொடிய சட்டப் பிரிவுகளின் கீழ் அநீதியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழ் – தமிழினம் – தமிழர் உரிமை என்றாலே ஒவ்வாமை கொண்டுள்ள மோடி அரசின் தமிழினப் பகையை செயல்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 12 (2018) அன்று சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் களியாட்டத்தை எதிர்த்து அமைதியான எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேர் பங்கேற்ற அப்போராட்டம், முற்றிலும் அமைதியாகவே நடைபெற்றது. அப்போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், கரூர் இரமேசு ஆகியோர் மீதும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மீதும் காவல்துறை தேவையற்ற முறையில் கண்ணாடி இழைத் தடிகளால் கடுமையாகத் தாக்கி, எலும்பு முறிவு உள்ளிட்ட சேதங்களை உண்டாக்கியது.

ஆனால், அப்போராட்டத்தின் போது ஒரு காவலர் தாக்கப்பட்டார் என்று சாக்கிட்டு நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கொடும் சட்டப்பிரிவுகளில் அடுத்தடுத்து வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை தொடுத்து வருகிறது.

அதேபோல், வன்முறையில் ஈடுபடாத – வன்முறை எதையும் தூண்டாத இயக்குநர் பாரதிராஜா மீது தமிழ்நாடு காவல்துறை இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இப்போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்ட திரைத் துறையினரோடு இணைந்து பங்கேற்ற இயக்குநர் கௌதமன் எந்தவகை வன்முறையிலோ, சட்ட விரோதச் செயலிலோ ஈடுபடவில்லை என்பது அதுகுறித்து ஊடகங்களில் வெளியான காணொலிகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்.

ஆயினும், வேண்டுமென்றே தமிழின உணர்வாளர்களை ஒடுக்க வேண்டும் என்ற இனத்துரோக எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 14 கொடும் பிரிவுகளின் கீழ் 3 வழக்குகளை தொடுத்து 24.06.2018 அன்று சிறையிலடைத்துள்ளது.

ஒரே நிகழ்வுக்கு மூன்று வழக்குகள் என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தாலும், பழிவாங்கும் உணர்ச்சி தலைக்கு ஏறிட, முடிந்தவரை துன்பம் தர வேண்டும் என்ற வன் நெஞ்சத்தோடு இக்கொடிய வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

இயக்குநர் கௌதமன் மீது பொய் வழக்குத் தொடுத்து, அவரைக் கைது செய்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு தொடரும் அடக்கு முறையினால் தமிழின உரிமைப் போராட்டங்களை முடக்கிவிட முடியாது என்ற அரசியல் அடிச்சுவடியை தமிழ்நாடு அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ச.க.வோடு சேர்ந்து தமிழ்நாட்டு மக்களிடம் அ.தி.மு.க.வும் முற்றிலும் தனிமைப்படும் என்ற எளிய உண்மையைக் கூட உணராமல், பா.ச.க. கை நீட்டியவர்களை எல்லாம் கைது செய்யும் கண்மூடித்தனமான அடக்குமுறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! இயக்குநர் கௌதமன் மீதும், இயக்குநர் பாரதிராஜா மீதும் போடப்பட்டுள்ள கொடிய பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இயக்குநர் கௌதமனை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.’’

gowthaman barathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe