ADVERTISEMENT

“பருத்தி கொள்முதலில் இடைத்தரகர்களின் கூட்டுக்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்” - பி.ஆர்.பாண்டியன் 

03:23 PM Jun 29, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“பருத்தி கொள்முதலில் இடைத்தரகர்களின் கூட்டுக்கொள்ளையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும்" என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்வதை 15 தினங்களாக வியாபாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனை கண்டித்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கலந்துகொண்டார்.


அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 15 தினங்களாக பருத்தி கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் என்கிற போர்வையில் இடைதரகர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மிகப் பெரும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக அரசு கோடை நெல் சாகுபடியை கைவிட்டு மாற்று பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என ஒலிபெருக்கியை கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதனால், நெல் சாகுபடி செய்தால் கொள்முதல் செய்வது தடைபடும் என்பதால் விவசாயிகள் பெருமளவு பருத்தி சாகுபடி மேற்கொண்டனர். பருத்திக்கு தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கிலோ ஒன்றுக்கு ரூபாய் 60 ரூபாய் 80பைசா குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

வியாபாரிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கிலோ பருத்தி ரூபாய் 110 முதல் ரூபாய் 111 வரையிலும் கொள்முதல் செய்திருக்கிறார்கள். உற்பத்தி பெருகியவுடன் இடைத்தரகர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒரு கிலோவுக்கு ரூபாய் 50 முதல் 60க்குள் கொள்முதல் என்ற பேரில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓரிரு விவசாயிகளிடம் மட்டும் பெயரளவில் கொள்முதல் செய்வதுபோல் நாடகமாடி விட்டு வெளிச் சந்தையில் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளே விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

எனவே தமிழக அரசு உடனடியாக மாநில உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு அமைத்தும், பருத்திக் கொள்முதலை உரிய சந்தை விலையில் கொள்முதல் செய்வதுடன் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பருத்தி தேவைப்படும் மாவட்டங்களில் இருக்கிற வியாபாரிகளை ஒருங்கிணைத்து, தமிழக அரசே நேரடியாக கொள்முதலில் இடைத்தரகர் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இதனால் பல இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. இதனை காரணம் காட்டி கொள்முதல் நிறுத்தி உள்ளதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார்


மன்னார்குடி மட்டுமின்றி காவிரி டெல்டா மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 15 தினங்களுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான குவிண்டால் பருத்தி அடுக்கி வைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இதனை கண்டித்து மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல மையத்தை விவசாயிகள் இழுத்து பூட்டி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT