We need that H.M.... Govt school children

மேச்சேரி அருகே, அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக் குழந்தைகள் வகுப்புக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வன்னியனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், உப்புபள்ளம், மருக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்ளைச் சேர்ந்த 286 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிவகுமார் (45) என்பவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, வாழதாசம்பட்டி பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், தலைமை ஆசிரியரின் இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி குழந்தைகள் கடந்த நான்கு நாட்களாக சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். தலைமை ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் பணி அமர்த்தம் செய்யும் வரை பள்ளிக்குப் போக மாட்டோம் என்று, வியாழக்கிழமையன்று (செப். 1) மாணவர்கள் திடீரென்று நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் சிவகுமார் கடந்த 11 ஆண்டுகளாக வன்னியனூர் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் இந்தப் பள்ளிக்கு வந்தபோது இங்கு 90 குழந்தைகள் படித்து வந்தனர். அவருடைய தொடர் முயற்சியால் தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 286 பேர் படித்து வருகின்றனர்.

Advertisment

தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளியை மேம்படுத்தி உள்ளார். இந்த வட்டாரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பல குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதற்குக் காரணமான தலைமை ஆசிரியர் சிவகுமாரை இடமாற்றம் செய்யக்கூடாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்'' என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா, மேச்சேரி காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று மக்களுடன் சமாதானபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.