Advertisment

'வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் வேண்டும்'- பாமகவின் ராமதாஸ் கோரிக்கை

'We need a change in the GST tax system'- Ramadoss of pmk demand

'இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது' என பாமகவின் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று தொடங்கிய உலக பொருளாதார மன்ற மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது குறித்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டது. ஆக்ஸ்பாம் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், சமத்துவத்திற்காகவும் பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் ஆகும். மத்திய அரசு மற்றும் பன்னாட்டு அமைப்புகள் வெளியிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த ஆக்ஸ்பாம் நிறுவனம், இந்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment

2020-21 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை சரியாக வசூலிக்கப்பட்ட ரூ.14.83 லட்சம் கோடியில், 64% அதாவது ரூ.9.50 லட்சம் கோடி, இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காடாக இருக்கும் ஏழை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியில் 33% அதாவது ரூ.4.90 லட்சம் கோடி மக்கள் தொகையில் 40% ஆக உள்ள நடுத்தர மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் 10% ஆக உள்ள பணக்காரர்களிடமிருந்து 3%, அதாவது ரூ.44,000 கோடி மட்டுமே வசூலிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை; மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி. ஏழை மக்களிடமிருந்து அவர்களின் மக்கள்தொகையை விட அதிக விழுக்காடு தொகை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களிடமிருந்து கிட்டத்தட்ட அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாகவும், பணக்காரர்களிடமிருந்து அவர்களின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவுமே ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வரி விதிப்பு சமத்துவமானதாக இல்லை என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையில்லை.

ஜி.எஸ்.டி 70 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் 1954-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு இப்போது வரை 160-க்கும் கூடுதலான நாடுகளில் ஜி.எஸ்.டி அல்லது அதற்கு இணையான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முதல் இரு ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதும், அதன் பின்னர் நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணித்ததும் வரலாறு ஆகும். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படி இல்லை. 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி வரிச்சுமை தாங்க முடியாமல் நலிவடைந்த சிறு மற்றும் குறுந்தொழில்களால், வீழ்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. ஏழை மக்களின் துயரங்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தொடர்கின்றன.

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஜி.எஸ்.டி வரி 10%க்கும் குறைவாகவே உள்ளது; அதுமட்டுமின்றி, ஒரு சில நாடுகளைத் தவிர மீதமுள்ள நாடுகளில் ஒரே அடுக்கு வரி விதிப்பு தான் உள்ளது. ஆனால், இந்தியாவில் தான் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு ஓர் அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படும் என்று 2017-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் வரி அடுக்குகள் குறைக்கப்பட்டாலும் கூட, கீழ் அடுக்குகள் தான் அகற்றப்படுமெனவும், உயர் அடுக்குகள் அதே அளவில் நீடிக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. இதனால் ஜி.எஸ்.டி வரி விகிதமும், அதனால் மக்களுக்கு ஏற்படும் சுமைகளும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

கடந்த 6 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களுக்கு ரூ.11.17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது; 2019-ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரி 30%லிருந்து 22% ஆகவும், புதிய நிறுவனங்களுக்கு 15% ஆகவும் குறைக்கப்பட்டது; 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகளின் மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி ஆகும். ஆனால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த விதமான வரிச்சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதே கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவார்கள். அதனால், இந்தியாவில் வறுமை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் ஒழியாது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மட்டும் தான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதே அறியாமை தான். உலகின் பெரும் பணக்கார நாடு அமெரிக்கா தான். ஆனால், அங்கு ஜி.எஸ்.டியும் இல்லை; ஒரே நாடு ஒரே வரி முறையும் இல்லை. ஆனால், அங்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வரி விதிப்புகள் பணக்காரர்களுக்கு வரமாகவும், ஏழைகளுக்கு சாபமாகவும் அமைந்துவிடக் கூடாது. எனவே, அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்; பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

GST politics ramadas pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe