Skip to main content

'வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் வேண்டும்'- பாமகவின் ராமதாஸ் கோரிக்கை

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

'We need a change in the GST tax system'- Ramadoss of pmk demand


'இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது' என பாமகவின் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று தொடங்கிய உலக பொருளாதார மன்ற மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இந்திய பொருளாதாரக் கொள்கைகளும், வரி விதிப்புகளும் எவ்வாறு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது குறித்த  ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டது. ஆக்ஸ்பாம் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், சமத்துவத்திற்காகவும்  பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் ஆகும். மத்திய அரசு மற்றும் பன்னாட்டு அமைப்புகள் வெளியிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த ஆக்ஸ்பாம் நிறுவனம், இந்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளது.

 

2020-21 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை சரியாக வசூலிக்கப்பட்ட ரூ.14.83 லட்சம் கோடியில், 64% அதாவது ரூ.9.50 லட்சம் கோடி, இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காடாக இருக்கும் ஏழை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியில் 33% அதாவது ரூ.4.90 லட்சம் கோடி மக்கள் தொகையில் 40% ஆக உள்ள நடுத்தர மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் 10% ஆக உள்ள பணக்காரர்களிடமிருந்து 3%, அதாவது ரூ.44,000 கோடி மட்டுமே வசூலிக்கப் பட்டுள்ளது.

 

இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை; மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி. ஏழை மக்களிடமிருந்து அவர்களின் மக்கள்தொகையை விட அதிக விழுக்காடு தொகை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களிடமிருந்து கிட்டத்தட்ட அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாகவும், பணக்காரர்களிடமிருந்து அவர்களின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவுமே ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வரி விதிப்பு சமத்துவமானதாக இல்லை என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையில்லை.

 

ஜி.எஸ்.டி 70 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் 1954-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு இப்போது வரை 160-க்கும் கூடுதலான நாடுகளில் ஜி.எஸ்.டி அல்லது அதற்கு இணையான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முதல் இரு ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதும், அதன் பின்னர் நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணித்ததும் வரலாறு ஆகும். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படி இல்லை. 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில்  ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி வரிச்சுமை தாங்க முடியாமல் நலிவடைந்த சிறு மற்றும் குறுந்தொழில்களால், வீழ்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. ஏழை மக்களின் துயரங்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தொடர்கின்றன.

 

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஜி.எஸ்.டி வரி 10%க்கும் குறைவாகவே உள்ளது; அதுமட்டுமின்றி, ஒரு சில நாடுகளைத் தவிர மீதமுள்ள நாடுகளில் ஒரே அடுக்கு வரி விதிப்பு தான் உள்ளது. ஆனால், இந்தியாவில் தான் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு ஓர் அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படும் என்று 2017-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் வரி அடுக்குகள் குறைக்கப்பட்டாலும் கூட, கீழ் அடுக்குகள் தான் அகற்றப்படுமெனவும்,  உயர் அடுக்குகள் அதே அளவில் நீடிக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. இதனால் ஜி.எஸ்.டி வரி விகிதமும், அதனால் மக்களுக்கு ஏற்படும் சுமைகளும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

 

கடந்த 6 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களுக்கு ரூ.11.17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது; 2019-ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரி 30%லிருந்து 22% ஆகவும், புதிய நிறுவனங்களுக்கு 15% ஆகவும் குறைக்கப்பட்டது; 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகளின் மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி ஆகும். ஆனால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த விதமான வரிச்சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதே கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவார்கள். அதனால், இந்தியாவில் வறுமை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் ஒழியாது.

 

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மட்டும் தான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதே அறியாமை தான். உலகின் பெரும் பணக்கார நாடு அமெரிக்கா தான். ஆனால், அங்கு ஜி.எஸ்.டியும் இல்லை; ஒரே நாடு ஒரே வரி முறையும் இல்லை. ஆனால், அங்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வரி விதிப்புகள் பணக்காரர்களுக்கு வரமாகவும், ஏழைகளுக்கு சாபமாகவும் அமைந்துவிடக் கூடாது. எனவே, அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்; பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.