
தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
மறுபுறம் கருப்பு பூஞ்சை தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 673 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு உடனே 30,000 மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.