Skip to main content

“காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்க வேண்டும்..” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

"We must provide world-class medicine to all those who are injured." pmk ramadoss

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவருக்குச் சொந்தமான முருகன் ஜெனரல் ஸ்டோர் என்ற கடையில் பட்டாசு விற்பனையையும் செய்துவந்துள்ளார். அந்தக் கடையில் நேற்று (26.10.2021) திடீரென தீவிபத்து ஏற்பட்டு, கடையில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்த விபத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், அவ்விபத்தில் பலியானவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

பட்டாசுக் கடை விபத்தில் காலித், ஷா ஆலம், சையத் அலி, ஷேக் பஷீர், அய்யாசாமி உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அய்யாசாமி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த அனைவரும் அவர்களது குடும்பங்களின் வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் ஆவர். அதனால், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அந்தக் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

 

அதேபோல், காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தி, இத்தகைய விபத்துகள் நடப்பதை அரசு தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.