ADVERTISEMENT

“பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” - சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்!

05:57 PM Apr 10, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலியல் கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு மாநில பெண் ஊழியர் சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் – தமிழ்நாடு அமைப்பின் 18 ஆவது தமிழ் மாநில மாநாடு கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்கம் அரங்கில் சனிக்கிழமை துவங்கியது.

இரு தினங்கள் நடைபெறும் இம்மாநாட்டின் முதல் நிகழ்வாகப் பெண் வங்கி ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் பி.எஸ்.ஆனந்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா துவக்கிவைத்து உரையாற்றினார். இதனையடுத்து அலுவலகங்களில், பயணங்களில், குடும்பங்களில் நடைபெறும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விவாதித்தனர்.

இதனைத் தொகுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ராதிகா உரையாற்றினார். விவாதங்களை ஒருங்கிணைத்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் க.கிருட்டிணன் நிறைவுரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி (விசாக) அமைக்க வேண்டும். பெண்களுக்கான சட்ட உரிமைகள் பணியாற்றும் அலுவலகங்களில் மறுக்கப்படுவதை மாநாடு கண்டிப்பதோடு, சட்டப்படியான உரிமைகள் அளிக்கப்படுவதை வங்கி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வங்கிப் பெண் ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ஜோதிபாரதி நன்றி கூறினார்.

இதனையடுத்து நடைபெற்ற பொது மாநாட்டில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தேபஷிஸ்பாசு சவுத்ரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் தமிழ்நாடு பொதுச்செயலாளர் க.கிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தொடர்ந்து ஞாயிறன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய அமர்வுகள் மாநாட்டில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT