Skip to main content

'இந்த சதியை அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்'-தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர்  

Published on 05/03/2025 | Edited on 05/03/2025
'We must all come together to defeat this conspiracy' - CM passes resolution

தமிழக தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ''இப்பொழுது இருக்கிற 543 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நம்முடைய தொகுதியின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக எட்டு மக்களவை இடங்களை இழக்கும் என சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 748 உயர்த்தப்பட்டு புதிய விகிதாச்சாரத்தின் படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை நாம் இழக்க நேரிடும். இந்த இரண்டு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிகமாக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்கள் உடைய எண்ணிக்கை பற்றிய கவலை அல்ல, நம் தமிழ்நாட்டின் உரிமைச் சார்ந்த கவலை. நம் தமிழ்நாடு எதிர்கொள்ளக் கூடிய முக்கியமான பிரச்சினையில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லோர் முன்பும் வைக்கிறேன்.

எல்லா கட்சிகளும் கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டினுடைய மக்களுடைய பிரநிதித்துவ தொகுதி எண்ணிக்கையை குறைத்து விடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவையினுடைய இடங்கள் குறையும் என சொல்வது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படக்கூடிய தண்டனையாக தான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

'We must all come together to defeat this conspiracy' - CM passes resolution

தமிழ்நாட்டினுடைய உரிமை; கூட்டாட்சி கருத்துகளின் கோட்பாடு; தமிழ்நாடு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக் கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக நாம் வலியுறுத்தி இருக்கிறோம். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே அபாயமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு இருக்காது என நான் நினைக்கிறேன். இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறேன். இந்திய நாட்டினுடைய கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் அச்சுறுத்தலை இது ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவம் மீதான நேரடி தாக்குதல். இப்படி ஒரு சமூக நீதி அற்ற, அநீதியான மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெறிக்கப்படும். தமிழ்நாட்டினுடைய நலன்; தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கக்கூடிய பலன் குறைக்கப்படும். 39 எம்பிக்கள் இருக்கும் போதே எழுப்புகின்ற குரலை  ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த எம்பிக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே நம்முடைய நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும். வர இருக்கும் எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பை நாம் கடுமையாக, ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என சொல்லி அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்'' என்றார். 

தீர்மானம்: இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிலக் இருக்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒரு மனுதாக கடுமையாக எதிர்க்கிறது.

நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்பட வேண்டும் என்று கடந்த 2000 ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026 இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க பட வேண்டும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் பட்சத்தில் 1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதி எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது. 

சார்ந்த செய்திகள்