Skip to main content

“கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்”  - அமைச்சர் துரைமுருகன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
“We know how to get water from Karnataka”  - Minister Duraimurugan
கோப்புப் படம் 

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே 3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “ஒரு பெட்ரோல் பங்கை திறப்பதற்கு கூட இவ்வளவு பெரிய விழாவா என நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு அரசாங்க பெட்ரோல் பங்க் மக்களுக்கு தரத்துடன் பெட்ரோலை வழங்குவது இதனுடைய நோக்கம். அப்படியானால் தரத்தோடு வழங்காதவர்கள் உண்டா என்றால் உண்டு. பல பேர் கொஞ்சம் பெட்ரோலை போட்டுவிட்டு மண்ணெண்ணெய் கலந்து விடுவார்கள். அப்படிப்பட்ட பங்குகளும் உண்டு நேர்மை இல்லாத பங்குகளும் உண்டு. பெட்ரோல் போடும்போது மீட்டர் சரியாக உள்ளதா என கண்ணில் பார்த்து போட்டுக்கொள்ள வேண்டும் அது நமது கடமை. தரமானதாகவும், நேர்மையானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு  திருப்தி ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தப் பெட்ரோல் பங்க் செயல்பட வேண்டும் என எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு சொன்னாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளாரே’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு  தண்ணீர் திறந்து விடுவோம் என்று கேள்விப்பட்டது உண்டா. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணியை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால், இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் திமுக  வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும். ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறித்து கேட்டதற்கு, அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்” என பதிலளித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரியவர் மோடி... சீதைக்கு சித்தப்பா...” - தன் ஸ்டைலில் விளாசிய அமைச்சர்  துரைமுருகன்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Duraimurugan speech on Candidate intro meeting in vellore

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகக் கூட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “யாராக இருந்தாலும் அண்ணா பேரை சொன்னால் தான் தமிழகத்தை ஆள முடியும்.

தி.மு.க.வை நசுக்கிடுவோம் என மோடி பேசுகிறார், நாங்கள் என்ன மகாபலிபுரம பாறையா நசுக்க. நாங்க படா படா ஆள் இல்லை சார், சோட்டா சோட்டா ஆளுங்க எங்கள ஒன்னும் பண்ண முடியாது. ராஜகோபால ஆச்சாரியர் எங்களை மூட்டை பூச்சி போல் நசுக்குவேன் என்றார் அவரையே நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்.

லால்பகதூர் சாஸ்திரி, தனிநாடு கேட்டால் கட்சியை தடை செய்வேன் என்றார். அதை சாமர்த்தியமாக முறியடித்தவர் அண்ணா. அண்ணாவை மட்டும் கலைஞர் சந்திக்காமல் இருந்திருந்தால் கலைஞர் கம்யூனிஸ்ட் வாதியாகி இருந்திருப்பார். அவர் ஒரு சமூகநீதிக்காரர். இதை அண்ணாவே சொல்லி இருக்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் சங்கத்திலிருந்து அப்போது கல்லூரி சார்பில் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்தார்கள். நான் இதனை உடனடியாக கலைஞரிடம் போய் சொன்னேன். அதற்கு கலைஞர், ‘எம்.ஜி.ஆர். திரையில் ஆற்றிய தொண்டுக்கு டாக்டர் பட்டத்திற்கு மிக பொருத்தமானவர். நீயே அதை முன்மொழிந்து செய்ய வேண்டும்’ என சொன்னார். இதை அப்படியே எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது, ‘தலைவரா அப்படி சொன்னார்’ என மிக உருக்கமாக பேசினார் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்பதை தடுத்து வழங்கச் செய்தவர் கலைஞர்.

தி.மு.க.வை பார்த்து நசுக்கி விடுவேன் உடைத்து விடுவேன் என பேசுகிறார் பெரியவர் மோடி. தி.மு.க.காரன் வெளியில் வரும்போது வாயில் வாய்க்கரிசியைப் போட்டுக் கொண்டு வருபவன். எதற்கும் துணிந்தவன். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப மேடைகளில் சொல்கிறோம் என்றால். திரும்பத் திரும்ப சொல்லவில்லை என்றால் சீதைக்கு சித்தப்பா ராவணன் என்று விடுவார்கள்” எனப்  பேசினார்.

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.