தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கடுமையாக உழைக்க வேண்டும் - தமிழக தலைவர்களுக்கு ராகுல் கட்டளை!

 We have to work hard to bring about regime change in Tamil Nadu - Rahul orders Tamil Nadu leaders!

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார் ராகுல்காந்தி. இந்த ஆலோசனையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, எம்.பி.க்கள் ப.சிதம்பரம், மானிக்கம்தாகூர், டாக்டர் விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, முன்னாள் தலைவர்கள், ஈ.வி.கே.எஸ்இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க அரசு தமிழக மக்களுக்கு எப்படி விரோதமாகச் செயல்பட்டு வருகிறது? அதனை எப்படியெல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்? தமிழ் மொழியின் தன்மையை எந்த வகையில் எல்லாம் சிதைத்து வருகிறது? நீட் தேர்வு திணிப்பு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன. தமிழகத்திலுள்ள அ.தி.மு.க ஆட்சி மற்றும் மத்திய பா.ஜ.க ஆட்சி ஆகியவற்றின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் பரப்புரை செய்வது குறித்தும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய ராகுல்காந்தி, ‘’தமிழக தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாகக் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும், வலிமைமிக்க கட்சியாக நாம் இருந்து வருகிறோம். இன்னும் கடுமையான உழைப்பை கொடுப்பதன் மூலம் காங்கிரஸ் மேலும் வலிமையடையும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதிமுக ஆட்சியால் பாதிப்புகளைச் சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு விடிவு காலம் ஏற்படுகிற வகையில் தேர்தலில் வெற்றியை நாம் பெற வேண்டும். அதற்குக் கடுமையான உழைப்பை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்புதான் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும்‘’ என்று நம்பிக்கை கொடுக்கும் வகையில் உரையாற்றியிருக்கிறார் ராகுல்காந்தி.

congress Rahul gandhi Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe