ADVERTISEMENT

“உசுரை வெறுத்துதான் இந்த ஆபத்தான வேலைக்கு வந்திருக்கிறோம்” - வேதனை குரலில் அரசுக்கு கோரிக்கை வைக்கும் இரண்டு பெண்கள்!

02:55 PM Aug 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

கலையரசி

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தகவல் விசயமாக நாம் சென்றுகொண்டிருந்தபோது நகரின் ஒதுக்குப்புறத்திலுள்ள உயரமான ட்ரான்ஸ்ஃபார்மரின் அருகே நின்றிருந்த சிலர் அதன் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நமக்கும் பொறி தட்ட, தற்செயலாக மேலே பார்த்தபோதுதான் ட்ரான்ஸ்பார்மரின் உச்சியில் 2 இளம்பெண்கள் மின்வயர் இணைப்பு பணியை அநாயாசமாய் செய்துகொண்டிருந்ததைப் பார்த்த நமக்கு வியப்பு தாங்கவில்லை. ஆண்கள் மட்டுமே ஈடுபடும் இந்த மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழிலில் அவர்களுக்கு இணையாக 2 பெண்கள் அந்தரத்தில் மின் இணைப்பு பணியை செய்துகொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நாம், அவர்கள் வேலையை முடித்துவிட்டு கீழே இறங்கும்வரை காத்திருந்தோம். சில மணித்துளிகளில் வேலையை முடித்தவர்கள், சரசரவென்று இறங்கி ட்ரான்ஸ்ஃபார்மரில் மின் சப்ளையைக் கொடுத்துவிட்டு நின்றிருந்த அந்த இரண்டு இளம்பெண்களிடமும் நாம் பேசினோம்.

அந்தரத்தில் ஆண்களே செய்யத் தயங்கும் இந்த மின்இணைப்பு பணியைத் துணிச்சலாக நீங்கள் செய்தது சாலையில் சென்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எந்தச் சூழ்நிலையில் அபாயகரமான இந்தப் பணிக்குப் நீங்கள் வர நேர்ந்தது என்று கேட்டபோது, அவர்கள் வெளிப்படுத்திய பின்னணி வெலவெலக்க வைத்தது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் கலா பார்வதி மற்றும் கலையரசி. வாழ்க்கைச் சூழலின் விளிம்புநிலை பிரிவைச் சேர்ந்த அந்த இரண்டு இளம்பெண்களும் எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். இவர்களில் கலா பார்வதியின் தாய் ராமு. தந்தை 6 வருடங்களுக்கு முன்பே காலமாகியிருக்கிறார். இவரோடு பிறந்த 5 பேர்களும் வாழ்க்கையில் செட்டிலாகி வெவ்வேறு பகுதியில் இருப்பவர்கள். 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான கலா பார்வதி, கணவனுடன் 3 வருடங்கள் மட்டுமே குடித்தனம் நடத்தியிருக்கிறார். அதன் பிறகு கணவன் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுக்க, அதன் காரணமாக கணவரைப் பிரிந்துவந்த கலா பார்வதியை அவரது தாயும் உடன் பிறந்தவர்களும் ஏற்க மறுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள். ஒண்டியாய் வெளியே வந்த கலா பார்வதிக்கு வாய்க்கும் கைக்கும் போராட்டம். வறுமையை சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

கலா பார்வதி

இந்தச் சூழலில் கோவில்பட்டி மின்சாரத்துறை, கேங்க்மேன் பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்தது. துணிச்சலாக அந்தப் பணிக்குச் சென்றிருக்கிறார் கலா பார்வதி. அங்கு ஆண்களே அதிகமாக வர, பெண்கள் 5 பேர் மட்டுமே வந்திருக்கின்றனர். அந்த சமயம் 30 அடி உயரமுள்ள மின் கம்பத்தில் ஏறுகிற சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 5 பெண்களில் கலா பார்வதி மட்டுமே வெற்றிபெற, அடுத்து நடத்தப்பட்ட வயர் மடக்கும் பணியை குறிப்பிட்ட 30 நொடிகளுக்குள் செய்து முடிக்க முடியாமல் போகவே அவர் வெளியே வர நேர்ந்தது. இந்தச் சூழலில்தான் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கலையரசி என்கிற திருமணமாகாத இளம் பெண்ணும் கலா பார்வதியுடன் இணைந்திருக்கிறார். திருமணமாகாத கலையரசியின் உடன்பிறந்தவர்கள் இருவரும் வாழ்க்கையில் செட்டிலாகி வெளியூரில் இருப்பவர்கள். தந்தை மரணமடைந்துவிட, வயதான தாய் கனகராணியை கவனிக்க வேண்டிய இக்கட்டானச் சூழ்நிலையில் இருந்தவர் கலையரசி. வருமானத்திற்கு வழி இல்லாத நிலையில் குடும்ப வறுமையைச் சமாளிக்க தீப்பெட்டி வேலைக்குப் போன கலையரசிக்கு அந்த வருமானம் கட்டுபடியாகவில்லை. இந்த நிலையில்தான் கலா பார்வதியுடன் இணைந்த கலையரசி, நகரிலுள்ள மின்சாரத்துறை காண்ட்ராக்டர் ஒருவரிடம் வயர் மேன் வேலைக்குப் போயிருக்கிறார்கள்.

அந்த சமயம் கோவில்பட்டி இ.பி.யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இவர்கள் மின் கம்பத்தில் சரசரவென்று ஏறுவதைப் பார்த்து வியந்து, மின் தொடர்பான பணியில் ட்ரெய்னிங் எடுங்கள் என்று ஊக்கப்படுத்தியிருக்கிறார். ஆறே மாதத்தில் மின்சாரம் தொடர்பான கேங்மேன் மற்றும் வயர் மேன் பயிற்சியை இரண்டு பெண்களும் கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அதையடுத்து அந்த இ.பி. காண்ட்ராக்டர் மூலமாகவே அவர் எடுக்கிற இ.பி.யின் காண்ட்ராக்ட் பணியில் வயர்மேனாக ஈடுபட்டிருக்கிறார்கள். புதிய மின்கம்பம் நடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களின் உச்சியில் மின் வயர் இணைப்புப் பணிகளைச் செய்வது ஆகியவற்றை திறமையாக செய்திருக்கிறார்கள். 25 முதல் 30 அடி உயரம் வரையுள்ள மின் கம்பத்தில் அநாயாசமாக ஏறி அந்தரத்தில் மின் இணைப்பு பணியைத் அசத்தலாகச் செய்திருக்கிறார்கள். இதையடுத்தே இரண்டு பெண்களும் இ.பி.யின் 3 வருடத்திற்கான ஒப்பந்தப் பணியாளரானார்கள். புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, உயர்ந்த மின்கம்பத்தில் வயர் இணைப்பு கொடுப்பது போன்ற பணிகளைப் பழுதின்றிச் செய்திருக்கிறார்கள். ஒப்பந்தப் பணியாளர்கள் என்றாலும் இவர்களின் தினக்கூலி 300 ரூபாய்தான். அதற்காகவே இத்தனை பெரிய ரிஸ்க்கான வேலையில் ஈடுபட நேர்ந்திருக்கிறது. 3 வருட ஒப்பந்தப் பணியில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் புதிப்பிக்கப்படுமாம். ஆனாலும் இந்தப் பணியின் கடைசி மூன்று மாத சம்பள பாக்கியும் வர வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

மின் இணைப்புப் பணியில் ஆண்களுக்கு நிகராவும் அதே சமயம் வேலையை ஆண்களைவிட இவர்கள் வெகு விரைவாகச் செய்வதையறிந்த கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட அக்கம்பக்கம் நகரங்களிலிருக்கும் இ.பி. சப்ஸ்டேஷன்கள் தங்கள் பகுதியின் ஊழியர்கள், வயர்மேன்கள் பற்றாக்குறை காரணமாக கலா பார்வதியையும், கலையரசியையும் வரவழைத்து ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இதுபோன்று மின்துறையின் பணிகள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கிடைக்க நேரிடும். ஆனாலும் தங்களின் வயிற்றுப்பாடு காரணமாக மின்சாரத்துறை அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருட அனுபவத்தில் வயர் மேன் தொழிலில் ஆண் பணியாளர்களையும் மிஞ்சும் அளவிற்குத் தேர்ந்த வயர்மேன் பணியாளராகியிருக்கிறார்கள்.

“வரதட்சணை விவகாரத்தால் கணவரைவிட்டு வெளியே வந்ததேன். என் தாய் உட்பட உடன்பிறந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டேன். சமூகத்தில் அநாதையானேன். வறுமை, அரை அங்குல இதயத்தையும், அறையடி வயிற்றையும் வளர்க்க வேண்டுமே. அதற்காக அரும்பாடுபட்டேன். நான் பட்ட அசிங்கங்களை நினைத்தால் எனக்குக் கண்ணீர் முட்டுகிறது. யாரிடமும் கையேந்தக் கூடாது. சுயமாக வேலை பார்க்க வேண்டும் என்ற வெறியால்தான், உயிரை வெறுத்து இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளேன். ஹெவி லோடு ட்ரான்ஸ்ஃபார்ம் வேலையில் அந்தரத்திலிருந்து பணியைச் செய்ய வேண்டும். அது சமயம் நாங்களும் எங்களின் பாதுகாப்பிற்காக மின் சப்ளையை நிறுத்திவிட்டு ட்ரான்ஸ்ஃபார்மரில் எர்த் போட்டுவிட்டுத்தான் உயர் மின்கம்பங்களில் வேலைகளைச் செய்ய ஏறுவோம். மற்றவர்களுக்கு மரணம் எப்பொழுது என்று தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் கண்ணெதிரில் மரணம் உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்பது நாங்கள் உணர்ந்ததுதான்” என்று கண்கள் கசிய வேதனையை வெளிப்படுத்தும் கலா பார்வதி, அரசாங்கம் எங்களைப் போன்ற மின் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கினால் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று வறண்ட குரலில் சொன்னார்.

“நிரந்தரமற்ற வேலை. எத்தனை நாள் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பது இந்தப் பணியில் நிச்சயமில்லை. கிடைக்கும் தினக்கூலியான 300 ரூபாயில் பெட்ரோல் செலவு 50 போக மீதமிருப்பதில்தான் எங்களின் வாழ்க்கையை ஓட்டுகிறோம். மரணம் பற்றி எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மரணத்தோடு போராடுகிறோம். எங்கள் வீட்டு வறுமைதான் என் கண்முன்னால் நிக்குது. வறுமைக்கு முன்னால மரணமோ உசுரோ எனக்குத் தூசுதான். உசுரை வெறுத்துத்தான் இந்த ஆபத்தான வேலைக்கு வந்திருக்கிறோம். இதற்கெல்லாம் துணிச்சல் வேணும். உயிர் பயத்த நெனச்சா இந்த வேலைக்கு வரமுடியாது. எங்களைப் போல உயிரை வெறுத்த பெண்களால்தான் இந்த வேலையைப் பார்க்க முடியும். அதே சமயம் இந்த ஆபத்தான பணிக்கு அனுப்ப, வீட்டிலுள்ளவர்களின் சப்போர்ட் வேண்டும்” என்கிற கலையரசியின் குரலில் வேதனை மண்டியிருந்தது. மின்சாரத் துறையின் இளநிலைப் பொறியாளர் நிலையிலிருக்கும் அதிகாரிகள் சிலரிடம் இந்தப் பெண்களின் மின் பணி பற்றி பேசியபோது, “ஆண் பணியாளர்களைவிட இந்தப் பெண் பணியாளர்கள் கொடுக்கப்பட்ட வேலையை விரைவாகச் செய்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆண்களுக்கு நிகரான இந்தப் பெண்களின் பணியும், துணிச்சலும், அசாத்தியமானதுதான்” என்கிறார்கள். “கண்ணெதிரே நிற்கும் எமன், எந்த நொடியிலும் பாசக்கயிற்றை வீசலாம் என்பதைத் தெரிந்தே இந்தப் பெண்கள் எமனோடு மல்லுக்கட்டுவது அசாதாரணமானதுதான்” என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT