
திருச்சி கொட்டப்பட்டில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி 481 குடும்பங்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு நகர்வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு முகாமில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் காசோலைகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளிக்கூடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிகப்பெரிய மழையைத் தமிழகம் சந்தித்துவருகிறது. பள்ளிக்கூடங்களில் கட்டடங்களை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த கட்டடங்கள் இருந்தால் உடனடியாக இடிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். சி.பி.எஸ்.இ. மட்டுமே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்துள்ளனர். நம்மைப் பொருத்தவரை அதுபோன்ற தேர்வுகள் ஏதும் நடத்தவில்லை” என்றார்.