publive-image

குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள், திடீரென மாயமானதால், உறவினர்கள் கவலை அடைந்தனர். இந்தச் சூழலில், 8 நாட்களுக்கு பிறகு அவர்கள் கரை திரும்பியது, உறவினர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.

Advertisment

குமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்த ஜோசப் ப்ராங்க்ளின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 11 மீனவர்கள் சென்றனர். கடந்த 23-ஆம் தேதி இரவு, கோவா கடற்கரையில் இருந்து 600 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்கும்போது, பெரிய கப்பல் ஒன்று இவர்கள் படகில் மோதியதே தெரியாமல் மோதிவிட்டுச் சென்றது. இதில், படகு நிலைகுலைந்து, மீனவர்கள் தூக்கி வீசப்பட்டனர். மோதிய வேகத்தில் படகின் மேற்கூரையும், கூண்டு எனச் சொல்லப்படும் படகின் பாடியும் சேதம் அடைந்துவிட்டது.

publive-image

Advertisment

இன்ஜினும் பழுதாகிவிட, காற்றின் வேகம் காரணமாக படகை கரையை நோக்கிச் செலுத்த முடியாமல் தவித்த மீனவர்கள், ஒருவழியாக படகைச் சரிசெய்து, இன்று (1-ஆம் தேதி) கரை திரும்பினர். முன்னதாக மீனவர்களை தொடர்புகொள்ள முடியாமலும், அவர்களின் நிலை தெரியாமலும் உறவினர்கள் கலக்கத்திற்கு ஆளானார்கள். சக மீனவர்கள் தேடும்போது, படகின் உடைந்த பாகங்கள் மட்டும் தென்பட்டதால், அத்தனை பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்தது.

இதனிடையே, 28-ஆம் தேதி சாட்டிலைட் போன் மூலம், கரையில் இருக்கும் உறவினர்களைத் தொடர்புகொண்ட மீனவர்கள், தாங்கள் உயிரோடு இருக்கும் விபரத்தை தெரிவித்தனர். அதன்பிறகே, உறவினர்கள் நிம்மதி அடைந்தனர்.

publive-image

படகு உரிமையாளர் ஜோசப் ப்ராங்ளின் “கப்பல் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட நாங்கள், முடிந்த அளவுக்கு படகைச் சீர் செய்து, கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். கரையை நெருங்கி வரும்போது சாட்டிலைட் போன் வேலை செய்ததால், 28-ஆம் தேதி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தோம். கரைக்கு 72 நாட்டிக்கல் தொலைவில் வரும்போது, இந்திய கடலோர காவல்படை எங்களுக்கு உதவியது. கரை திரும்புவோம், உயிர் பிழைப்போம் என்ற எண்ணமே எங்களுக்கு இல்லை. மாதாவின் அருளால் வந்து சேர்த்திருக்கிறோம்.” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!