Advertisment

தன்னுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று கூறியதை வைகோ திரும்பபெறவேண்டும் : நாம் தமிழர் கட்சி

sv

Advertisment

இன்று 07-07-2018 காலை 10 மணியளவில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம் குறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான சந்திரசேகரன் கூறியதாவது:

“ஸ்டெர்லைட் நச்சுஆலையை மூடக்கோரி நடைபெற்றுவந்த தொடர் போராட்டத்தின் நூறாவது நாளான 22-05-2018 அன்று ஆயிரக்கணக்கான தூத்துக்குடி பொதுமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கப் பேரணியாகச் சென்றனர். மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தி அமைதியான முறையில் பேரணி வந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்குப் பதற்றமான சூழ்நிலை உருவானது. மக்கள் எதிர்பாராத வேளையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அறவழியில் தொடங்கி அரசப் பயங்கரவாதத்தில் முடிந்த இப்போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பங்கேற்றபோதும் இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் நாம் தமிழர் கட்சி மற்றும் சில அமைப்புகள் மீது மட்டும் திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மீதான விசாரணை மற்றும் கைது நடவடிக்கை அதிகரித்தது. நிர்வாகிகளின் வீடுகள், தொழில் செய்யும் இடங்கள் என்று காவல்துறை விசாரணை என்ற பெயரில் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி வருகின்றனர். நள்ளிரவுகளில் பெண்கள் மட்டுமே உள்ள வீடுகளில் விசாரணை என்றபெயரில் சோதனை நடத்துகின்றனர். இதனால் 2000க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் செய்த தவறுகளை மறைப்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி நூற்றுக்கும் அதிகமான வழக்குகளைப் பேரணியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் பதிந்துள்ளனர். அதைக் காரணம்காட்டி சனநாயக முறையில் போராடும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது நாம் சனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது அராஜக ஆட்சியில் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது. இத்தகைய அராஜகப்போக்கை சட்டத்தின் வாயிலாக எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசின் மீதும், தமிழகக் காவல்துறையின் மீது வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. விரைவில் வழக்கறிஞர்கள் பாசறை சார்பாகத் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது நிலவும் அசாதரணச் சூழலைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து அம்மாநாட்டில் விவாதிக்கப்டும். இதில் டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரும் பங்கேற்கவிருக்கின்றனர். காவல்துறையினர் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதை நிறுத்தவேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்.

Advertisment

கடந்த 30-05-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு அவர்கள் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தூத்துக்குடி போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காணொளி ஆதாரம் இருப்பதாகக் கூறும் காவல்துறையினர் இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்தத் தவறும் செய்யாத ஒருவரை தூத்துக்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காகக் கைது செய்துள்ளது காவல்துறை. அவரைத் தொடர்ந்து தூத்துக்குடி மண்டலச்செயலாளர் இசக்கிதுரை அவர்கள் மீது பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினார் என்று வழக்குப் பதிவு செய்து கடந்த 10-06-2018 அன்று அதிகாலை 03 மணியளவில் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது இதுவரை 41 பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதேபோன்று தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் 36 வட்டச்செயலாளர் செல்வக்குமார் மீது 81 பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறாக மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு உண்மையும் நேர்மையுமாகக் களத்தில் துணைநிற்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டுத் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் எனக் கனவு காண்கிறது மத்திய – மாநில அரசுகள். இளைஞர்கள் மத்தியில் எழுச்சிபெற்று வரும் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைபவர்களுக்கு வழக்கு, சிறை போன்ற அச்சஉணர்வை ஏற்படுத்திக் கட்சியின் வளர்ச்சியை முடக்க நினைக்கிறார்கள். ஆயினும் அதிகாரத்தின் இந்த அடக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி சட்டரீதியாக எதிர்கொண்டு தொடர்ச்சியாக மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையாக இறுதிவரை உறுதியாகப் போராடுவோம்!

மேலும் நேற்று 06-07-2018 மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மதுபோதையில் அவதூறாகப் பேசி மதிமுக தொண்டர்களுடன் மோதலில் ஈடுபட்ட ஜெகதீசன், வெற்றி ஆகிய இரண்டு வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்ல; அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் ஏதுமறியாமல் நாம் தமிழர் கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக வைகோ, தன்னுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று செய்தியாளர்களிடம் கூறியதைத் திரும்பபெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் இராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோட்டைக்குமார், மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் சங்கர், மாநில செய்திப்பிரிவு இணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.

முன்னதாகக் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

Thoothukudi vaiko seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe