/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-23_0.jpg)
நாகை மாவட்டம், ஆதலையூர் - ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 11வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நேற்று (30.7.2021) மாலை 5.30 மணியளவில் இந்நிகழ்ச்சி நடந்தேறியது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு ஆம்புலன்ஸை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “மஜக ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளில் இத்தோடு 11வது ஆம்புலன்ஸை அர்ப்பணிக்கிறோம். ஓட்டு அரசியல், அரசியல் அதிகாரம், தேர்தல் நிலைப்பாடு ஆகியவற்றைக் கடந்து சேவை அரசியலை முன்னெடுக்கிறோம்.
எங்களிடம் உள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் வீண் உணர்ச்சிகளுக்கு பழக்காமல், அறிவு சார்ந்தவர்களாகவும், முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக்குகிறோம். மக்களுக்கு ஈடுபாட்டோடு சேவையாற்றும் எண்ணங்களை அவர்களிடம் ஊட்டுகிறோம். எங்கள் அரசியலின் மிகப்பெரும் சாதனையாக மத நல்லிணக்கச் சேவையை ஆற்றிவருகிறோம். அரசியலில் இப்போது விஷவாயு வீசத் தொடங்கியுள்ளது. அதை சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதன் மூலம்தான் முறியடிக்க முடியும்.
நமது தமிழகம், திராவிடத்தாலும்தமிழ் தேசியத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட பூமி. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் தலித்துகளுக்கிடையே உள்ள உறவை நாம் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும். இந்த ஆம்புலன்ஸ் சேவை சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்தது. ஒரு பாஜக சகோதரர் அழைத்தாலும் உடனே சென்று உதவுவோம். இதுதான் உண்மையான மனிதநேயம். இத்தகைய ஆம்புலன்ஸ் சேவைகளை நாங்கள் அடுத்தடுத்து பல இடங்களில் செயல்படுத்த உள்ளோம்” என்று அவர் பேசினார்.
பிறகு ஆம்புலன்ஸை அர்ப்பணிக்க, ஏனங்குடி, ஆதலையூர், பாக்கம் - கோட்டூர், வடகரை ஜமாத் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தை அவர் திறந்து வைக்க, டியூசன் சென்டரை மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்தாஜூதீன் திறந்துவைத்தார். ஆம்புலன்ஸ் வாங்கிட பெரிதும் பாடுபட்ட ஏனங்குடி இஸ்லாமிய கலாச்சார பேரவைக்கு தமிமுன் அன்சாரி நன்றி கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1454.jpg)
மாநில துணைச் செயலாளர் நாகைமுபாரக், கரோனா காலத்தில் மஜகவின் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கிய சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரியாஸ், மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லா உள்பட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் தென்மதி சந்திரசேகர், திருக்கண்ணபுரம் உதவி ஆய்வாளர் S.K. ரவி, மருத்துவ அலுவலர்கள் மோகன்தாஸ், முபாரக் அலி, சுகாதார ஆய்வாளர்கள் மனோகரன், ஆய்வாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். கரோனாவில் முன்களப் பணியாளராகப் பணியாற்றிய அனைவருக்கும் மஜகவின் சார்பில் நினைவுப் பரிசுகள்வழங்கப்பட்டன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)