Skip to main content

வாய்த்தகராறில் கழுத்து அறுத்து கொன்றோம்!: சேலம் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகள் வாக்குமூலம்!!

Published on 25/08/2018 | Edited on 27/08/2018
m

 

சேலத்தில் வாலிபரை கொலை செய்து, கிணற்றில் சடலம் வீசப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.


சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன் (32). கட்டடத் தொழிலாளி. இவரை கடந்த 22ம் தேதி சிலர் கடத்திச்சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி, சடலத்தை குரங்குசாவடி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. 

 

முத்துக்குமார்

m


சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மதுசூதனனின் உறவினர் வசந்த், அவருடைய நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் கடத்திச்சென்று கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று (ஆகஸ்ட் 24, 2018) அதிகாலையில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


கைதான மூன்று பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

வசந்த்

v


கொலை செய்யப்பட்ட மதுசூதனனும் வசந்தும் இரவு நேரங்களில் அடிக்கடி மது குடிப்பார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, அவர்களுடன் நண்பர்கள் சிலரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மதுசூதனன், வசந்தை பார்த்து 'போடா பொட்டையா...' என்று திட்டியதோடு, திடீரென்று வசந்தின் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார். உயிருக்குப் போராடிய வசந்த், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் பிழைத்தார்.

 

ட்


இந்த மோதலை அறிந்த உறவுக்காரர்கள் சிலர், அவர்களை சமாதானப்படுத்தினர். என்றாலும், தன்னை 'பொட்டை' என்றதோடு, கழுத்தறுத்த மதுசூததனை தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று மிரட்டிவிட்டுப் போனாராம். 


இந்நிலையில்தான் மதுசூதனன், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் மதுபோதையில் விழுந்து கிடந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வசந்த், தன்னுடைய கூட்டாளிகள் தட்சிணாமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோரை அங்கு வரவழைத்தார். 


அவர்கள் மூவரும் சேர்ந்து மதுசூதனனை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து குரங்குசாவடி பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கினர். பின்னர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மதுசூதனன் பலியானார். தடயத்தை மறைப்பதற்காக சடலத்தின் உடல் மீது கல்லைக்கட்டி கிணற்றில் வீசிவிட்டனர். பின்னர் அன்று இரவோடு இரவாக மூவரும் கரூருக்கு கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனர். கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கி தங்கியிருந்தபடி கட்டட வேலைக்குச் சென்று வந்தனர். செல்போன் அழைப்புகள் மூலம் அவர்களை நெருங்கிய போலீசார், கைது செய்து விசாரித்ததில் இந்த விவரங்கள் தெரிய வந்தன. 


கொலை நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த மதுபாட்டில் துண்டுகள், சடலத்தை இழுத்துச் சென்றபோது முள்புதரில் சிக்கிக்கொண்ட வசந்தின் ஒற்றை செருப்பு ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீசார், வசந்த்துதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதி செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்