
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் உறுதியான போராட்டத்திற்கு பணிந்து மோடி அரசு விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன். இப்பொழுது போராடிய விவசாயிகளை தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்று பொய்களை விதைத்ததற்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவர்கள்மீது வன்முறையை ஏவி விட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மரணத்திற்கு காரணமாக இருப்பவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
விவசாய விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு இருந்தாலும், அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு கையாண்ட வன்முறையின் காயங்கள் அவ்வளவு எளிதில் ஆறிவிடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.